'வொண்டர் வுமன் 3': மீண்டும் இணையும் கால் கேடட் - பேட்டி ஜென்கின்ஸ்

பேட்டி ஜென்கின்ஸ் - கால் கேடட் - லிண்டா கார்டர்
பேட்டி ஜென்கின்ஸ் - கால் கேடட் - லிண்டா கார்டர்
Updated on
1 min read

'வொண்டர் வுமன்' இரண்டாம் பாகம் வெளியான ஒரு வாரத்துக்குள் மூன்றாம் பாகம் எடுக்கப்படும் என வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டிருந்த 'வொண்டர் வுமன்' திரை வரிசை இந்த மூன்றாம் பாகத்தோடு நிறைவடையவுள்ளது.

"உலகம் முழுவதும் ரசிகர்கள் டயானா ப்ரின்ஸ் கதாபாத்திரத்துக்குக் கொடுத்திருக்கும் வரவேற்பு, 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தின் முதல் வார இறுதியில் அதிக வசூலுக்குக் காரணமாக இருந்துள்ளது. இந்த வேளையில் எங்கள் நிஜ வாழ்க்கை அதிசயப் பெண்மணிகளான கால் கேடட்டும் பேட்டி ஜென்கின்ஸும், இந்தக் கதையை மேற்கொண்டுத் தொடரவுள்ளார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்த வொண்டர் வுமன் திரை வரிசைக் கதையை நிறைவு செய்ய இவர்கள் மீண்டும் இணையவுள்ளார்கள்" என்று வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு வெளியான 'வொண்டர் வுமன்' திரைப்படத்தின் முதல் பாகம் விமர்சனங்களில் அதிக பாராட்டைப் பெற்று கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்தது. அடுத்த பாகமான 'வொண்டர் வுமன் 1984' வெளியீடு, கரோனா நெருக்கடி காரணமாக பல முறை தள்ளிப்போடப்பட்டது. முடிவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்கிலும், ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு வெளியானது.

அமெரிக்காவில் திரைப்படம் வெளியானாலும் வசூல் விவரங்களைத் தயாரிப்பு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. உலக அளவில் 38.5 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் படம் வசூலித்துள்ளது.

இன்னொரு பக்கம், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அத்தனை படங்களுமே 2021ஆம் வருடம், திரையரங்கில் வெளியான அதே நாளில் ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என்று அதிரடியாக அறிவித்ததில் பல இயக்குநர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும், மூன்றாவது பாகத்தை இயக்குவீர்களா என பேட்டி ஜென்கின்ஸிடம் கேட்டதற்கு, அது கேள்விக்குறியே என்றும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மீண்டும் முழு வீச்சில் திரையரங்குகளுக்கான படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனமாக மாறினால் மீண்டும் இயக்குவேன் என்றும் சில நாட்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in