அர்னால்டுக்கு 25 மில்லியன் டாலர்கள்; மோசமான படம் என்று அனைவருக்கும் தெரியும்: ஜார்ஜ் க்ளூனி

அர்னால்டுக்கு 25 மில்லியன் டாலர்கள்; மோசமான படம் என்று அனைவருக்கும் தெரியும்: ஜார்ஜ் க்ளூனி
Updated on
1 min read

1997ஆம் ஆண்டு தான் நடித்த ‘பேட்மேன் அண்ட் ராபின்’ திரைப்படத்தைத் தன்னால் மீண்டும் பார்க்க முடியாது என்றும், பார்க்கும்போது உடலளவில் கூட வலி தரக்கூடிய அனுபவமாக அது இருந்தது என்றும் நடிகர் ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.

‘பேட்மேன் அண்ட் ராபின்’ என்கிற சூப்பர் ஹீரோ படத்தில் ஜார்ஜ் க்ளூனி நடித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக மிஸ்டர் ஃப்ரீஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்னால்ட் நடித்திருந்தார். பாய்ஸன் ஐவி என்ற கதாபாத்திரத்தில் உமா துர்மேன் நடித்திருந்தார். ஹாலிவுட்டின் பிரபல நடிகர்கள், பெரிய பட்ஜெட், சூப்பர் ஹீரோ படம் எனப் பல அம்சங்கள் இருந்தாலும் இந்தப் படம் இதுவரை வெளியானதில் மிக மோசமான பேட்மேன் படம் என்று விமர்சிக்கப்படுகிறது.

ஏற்கெனவே இந்தப் படத்தில் தான் மோசமாக நடித்திருந்ததாகக் கடந்த மாதம் ஒரு பேட்டியில் ஜார்ஜ் க்ளூனி பேசியிருந்தார். சமீபத்தில் மீண்டும் அவர் பேசுகையில், "நான் அப்போது அந்தப் படத்தில் எதையும் மாற்றியிருக்க முடியாது. ஏனென்றால் அது ஒரு பிரம்மாண்டப் படம். நான் அந்தக் காலகட்டத்தில் வாய்ப்பு கிடைத்த ஒரு சாதாரண நடிகனே. என் பெயரை வைத்து ஒரு படம் உருவாகும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கவில்லை.

அர்னால்டுக்கு அந்தப் படத்துக்காக 25 மில்லியன் டாலர் சம்பளம் தரப்பட்டது. ஆனால் நான் அவரைப் படப்பிடிப்பில் சந்திக்கவே இல்லை. நாங்கள் சேர்ந்து நடிக்கும் காட்சிகளே படத்தில் இல்லை. அந்தப் படமே ஒரு ராட்சச இயந்திரத்தைப் போல. நான் உள்ளே குதித்து அவர்கள் சொன்னதைச் செய்தேன். ஆனால், படத்தின் தோல்விக்கு நாங்கள் அனைவரும்தான் காரணம்.

நான் மோசமாக நடித்திருந்தேன். அதன் பிறகு சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் வென்ற அகிவா கோல்ட்ஸ்மென்தான் அந்தப் படத்துக்கும் திரைக்கதை. அது மோசமாக எழுதப்பட்ட திரைக்கதை என அவரே சொல்வார். சமீபத்தில் மறைந்த இயக்குநர் ஜோயல் ஷூமேகரும் படம் சரியாக எடுக்கப்படவில்லை என்பதைச் சொல்லியிருப்பார்" என்று க்ளூனி பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in