

காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகளைத் தழுவி எடுக்கப்பப்பட்ட பல ஹாலிவுட் திரைப்படங்கள் இன்றும் பேசப்படுகின்றன. கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ (The Prophet ) கவிதைத் தொகுப்பைத் தழுவி பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹாயக்கின் தயாரிப்பில் இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ‘த புராஃபெட்’ (The Prophet) என்ற திரைப்படமும் இந்தப் பட்டியலில் இடம்பெறக்கூடும். 1923- ம் ஆண்டு வெளிவந்த ஜிப்ரானின் இந்தக் கவிதைத் தொகுப்பு தத்துவத் தாக்கங்கள் நிறைந்த ஒரு புத்தகம்.
இவ்வகையான நூல்களைத் திரைவடிவில் கொண்டுவருவது கடினம் என்ற விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு முழுமையான அனிமேஷன் திரைப்படத்தை அளித்துள்ளார் ஹேயக். கலீல் ஜிப்ரானின் லெபனான்தான் சல்மா ஹாயக்கின் பூர்விகம் என்பது கூடுதல் செய்தி. அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தைப் பற்றி நல்ல விதமான விமர்சனங்களும் திறனாய்வுகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
வழிகாட்டும் நாயகன்
‘தீர்க்கதரிசி’ திரைப்படத்தை உணர்வுபூர்வமாக ரசித்துப் பார்க்க கலில் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ கவிதைத் தொகுப்பைப் பற்றிய அடிப்படையான அறிவு அவசியமாகிறது. 1923-ம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்ட. கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் 26 உரைநடைக் கவிதைகள் கொண்ட ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ ஒரு தத்துவப் பேழை. ஜிப்ரான் பல கவிதைத் தொகுப்புகளைப் படைத்திருந்தாலும் அவருக்கு மங்காப் புகழை பெற்றுத்தந்தது ‘தீர்க்கதரிசி’தான்.
இக்கதையின் நாயகர் அல் முஸ்தபா. நாடு கடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஓர்பலீஸ் என்ற நகரத்தில் வாழ்ந்த அவர் தன் தாய்நாட்டுக்குத் திரும்ப எத்தனிக்கிறார். ஓர்பலீஸ் மக்கள் அவரைத் தங்களுடனே இருக்குமாறு மன்றாடுகின்றனர். அவர் கற்றறிந்த வாழ்க்கைத் தத்துவங்களைத் தங்களிடமும் பகிர்ந்துகொள்ளுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கின்றனர். பலரும் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். உடைகள், வழிபாடு திருமணம், ஈகை உவகை காதல், மரணம், நட்பு, அழகு, இன்பம் போன்ற மற்றும் பல கேள்விகளுக்கு அல் முஸ்தபா தேர்ந்த முதிர்ச்சியுடன் பதில் அளித்த பின் புறப்படத் தயாராகிறார்.
அனிமேஷன் அழகு
தீர்க்கதரிசி திரைப்படம், அனிமேஷன் தொழில்நுட்பத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முயற்சி. ‘த லயன் கிங்’ (The Lion King), ‘அலாவுதீன்’ (Alladin) போன்ற அனிமேஷன் வெற்றிப் படங்களை இயக்கிய ரோஜர் அலர்ஸ் இந்தப் படத்தின் இயக்குநர். ‘தீர்க்கதரிசி’ தொகுப்பில் அமைந்த எட்டுக் கவிதைகளை உள்ளடக்கி எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் சிறப்பே எட்டு வெவ்வேறான அனிமேஷன் நிபுணர்களால் கையாளப்பட்ட தனித்தனி பாணிதான். ஒரு பாகம் முடிந்தவுடன் புத்துணர்ச்சியுடன் திரைப்படம் அடுத்த இலக்கு நோக்கிப் பாய்ச்சலுடன் ஓடுவது போன்ற ஒரு பிரமை ஏற்படுவது உண்மைதான். ஒவ்வொரு நிபுணரும் பயன்படுத்தியுள்ள வர்ண ஓவியங்களின் அணிவகுப்பு கண்களுக்கு விருந்து, ஜிப்ரானே ஒரு சிறந்த ஓவியர் என்பது கொசுறு செய்தி.
- சல்மா ஹாயக்
திரைப்படத்துக்கு மேலும் மெருகூட்ட நாயகர் அல் முஸ்தபாவின் குரலாகப் புகழ் பெற்ற நடிகர் லியாம் நீசன் கர்ஜிக்கிறார். ஜிப்ரானின் கவிதை வரிகளை அவர் சொல்லும்போது நமது செவிகள் தானாக மடிந்து கேட்பது போன்ற உணர்வு தவிர்க்க இயலாதது. காதல், பிறப்பு, குழந்தைகள், வேலை, மரணம் போன்ற கவிதைகளை லியாம் நீசன் அல் முஸ்தபாவாகச் சொல்லும்போது, நாமே ஓர்பலீஸ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜிப்ரானின் குரலில் கவிதைகளைக் கேட்பது போன்ற மாய வலையில் நம்மைப் பின்னிப் பிணைய வைத்துள்ளார் இப்படத்தின் இயக்குநர். கேபிரியேல் யாரெடின் இசை படத்துக்கு மேலும் ஒரு பலம். விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும், பிரமிக்க வைக்கும் வர்ண மழைப் பொழிவும், ஓவியர்களின் தனித்தனிப் பாங்குகளும் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு மனநிறைவைத் தருகின்றன.
ஐம்பது மொழிகளுக்கு மேலாக மொழிபெயர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பு ‘தீர்க்கதரிசி’. கோடிக்கணக்கான பிரதிகள் உலகெங்கும் விற்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் மக்களுக்கு ஒரு நல்ல கவிதைத் தொகுப்பைத் திரை வடிவில் வழங்குவதால் ஒரு உன்னத முயற்சி என்று அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறது. இந்தத் திரைப்படம் கண்களுக்கும் உணர்வுகளுக்கும் செவிக்கும், அதற்கும் மேலாக, ஆன்மாவுக்கும் விருந்து என்றுதான் சொல்ல வேண்டும்.
கட்டுரையாளர் இராம் மோகன். இ.வ.ப.
துணை ஆணையர், மத்திய கலால் மற்றும் சேவை வரித் துறை,
புதுச்சேரியில் பணியாற்றிவருபவர்
தொடர்புக்கு prmohan1969@yahoo.co.in