

'தோர்' நான்காம் பாகத்தில் வில்லனாக நடிக்க ‘பேட்மேன்’ நடிகர் கிறிஸ்டியன் பேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்துடன் மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் மார்வெல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் திரைப்பட வரிசை ஆரம்பமானது. தொடர்ந்து 'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு அந்தக் கதாபாத்திரங்கள் வாழும் உலகம் எனத் தனியாகச் சித்தரிக்கப்பட்டது.
மூன்று கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படமே இந்த வரிசையில் கடைசி. இந்தப் படம் உலகத் திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
தற்போது மார்வெல் சினிமா உலகின் நான்காவது கட்டத்தில் வெளியாகவுள்ள படங்களின் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் அடுத்த வருடம் 'தோர்' படத்தின் நான்காவது பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் வெளியாகவுள்ளது.
'தோர் ரக்னராக்' படத்தின் இயக்குநர் டைகா வைடிடி இந்தப் படத்தை இயக்குகிறார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மீண்டும் தோர் கதாபாத்திரத்திலும், டெஸ்ஸா தாம்ஸன் வால்கைரீ கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர்.
தற்போது இந்தப் படத்தின் வில்லனான கோர் தி பட்சர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கிறிஸ்டியன் பேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைக் கடந்த வாரம் நடைபெற்ற டிஸ்னி முதலீட்டாளர் தின நிகழ்ச்சியில் மார்வெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கிறிஸ்டியன் பேல், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தி டார்க் நைட்’ படவரிசையில் பேட்மேனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.