

‘ஃபென்டாஸ்டிக் 4’ கதாபாத்திரங்கள் மார்வெல் சினிமாடிக் உலகத்தோடு இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்வெலின் புகழ்பெற்ற காமிக்ஸ் ‘ஃபென்டாஸ்டிக் 4’. இதை அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு ஜோஷ் ட்ராங்க் இயக்கத்தில் ‘ஃபென்டாஸ்டிக் 4’ திரைப்படம் வெளியானது. இதை 20-வது செஞ்சுரி நிறுவனம் தயாரித்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில், காமிக்ஸில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ குழுவோடு இணைந்திருந்த ‘ஃபென்டாஸ்டிக் 4’ கதாபாத்திரங்கள் திரைப்படங்களிலும் இடம்பெறுமா என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். ‘ஃபென்டாஸ்டிக் 4’ கதாபாத்திரங்களின் காப்புரிமை 20-வது செஞ்சுரி நிறுவனத்திடம் இருந்து வந்தது.
கடந்த ஆண்டு 20-வது செஞ்சுரி நிறுவனத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கியதால் தற்போது அதன்வசம் இருந்த கதாபாத்திரங்களின் காப்புரிமை மீண்டும் மார்வெல் நிறுவனத்திடமே வந்துள்ளன. இதனால் ‘ஃபென்டாஸ்டிக் 4’, ‘எக்ஸ் மென்’, ‘டெட்பூல்’ உள்ளிட்ட கதாபாத்திரங்களை மார்வெல் சினிமாடிக் உலகத்தோடு இணைக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்தச் சூழலில் அதன் முதற்கட்டமாக ‘ஃபென்டாஸ்டிக் 4’ கதாபாத்திரங்களை ஜான் வாட்ஸ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஒரு படத்தின் மூலம் மார்வெல் சினிமாடிக் உலகத்தில் இணைக்கவுள்ளதாக மார்வெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜான் வாட்ஸ் ‘ஸ்பைடர்மேன் - ஹோம்கமிங்’ மற்றும் ‘ஸ்பைடர்மேன்- ஃபார் ஃப்ரம் ஹோம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.