

அடுத்த ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை இயக்க ‘வொண்டர் வுமன்’ படத்தை இயக்கிய பேட்டி ஜென்கின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டிஸ்னி நிறுவனம் தனது முதலீட்டாளர் தின நிகழ்ச்சிகளை ஆன்லைனில் கொண்டாடியது. இதில் பல்வேறு பிரபலங்கள் இணையத்தின் வாயிலாகப் பங்கேற்றனர். இந்நிகழ்வில் டிஸ்னியின் படங்கள், மற்றும் வெப் சீரிஸ் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் மார்வெல் நிறுவனம் சார்பில் ‘வாண்டாவிஷன்’,‘லோகி’, ‘ஃபால்கான் அண்ட் தி விண்டர் சோல்ஜர்’ ஆகிய வெப்சீரிஸ்களின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
மேலும் லூகாஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் வரவிருக்கும் ‘ஸ்டார் வார்ஸ்’ படங்கள் மற்றும் வெப்சீரிஸ் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகின. இந்த அறிவிப்புகளை லூகாஸ் பிலிம்ஸ் தலைவர் கேத்லீன் கென்னடி வெளியிட்டார்.
அதில் ‘ரோக் ஸ்க்வாட்ரன்’ என்ற படத்தை இயக்க ‘வொண்டர் வுமன்’ படத்தை இயக்கிய பேட்டி ஜென்கின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ஸ்டார் வார்ஸ்’ பட வரிசையில் ஒரு படத்தை ஒரு பெண் இயக்குவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து பேட்டி ஜென்கின்ஸ் கூறியிருப்பதாவது:
''ஒரு இயக்குநராக போர் விமானியைப் பற்றிய ஒரு படத்தை இயக்கவேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. ஒரு போர் விமானியின் மகளான என்னுடைய நினைவுகளில் என் அப்பா தினமும் காலை தன்னுடைய போர் விமானத்தில் பறந்து செல்வது புதைந்துள்ளது.
போரில் அவர் இறந்து போனதும் புதைந்து கிடந்த அந்த நினைவுகளை எல்லாம் ஒரு படத்தின் மூலம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற பேராவல் எனக்குள் எரிந்தது. தற்போது லூகாஸ் பிலிம்ஸ் மற்றும் டிஸ்னியின் மூலம் அது சாத்தியமாகியுள்ளது''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இப்படம் வரும் 2023ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.