Last Updated : 03 Dec, 2020 12:14 PM

 

Published : 03 Dec 2020 12:14 PM
Last Updated : 03 Dec 2020 12:14 PM

இந்தியாவில் மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள்: கிறிஸ்டோபர் நோலன்

‘டெனெட்’ படத்தின் சில காட்சிகளை இந்தியாவில் படமாக்கிய அனுபவம் குறித்து இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் பகிர்ந்துள்ளார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெனெட்’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒரு பகுதி இந்தியாவில் படமாக்கப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடியால் ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் சில நாடுகளில் மட்டும் வெளியானது. தற்போது இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் வரும் 5ஆம் தேதி ‘டெனெட்’ வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து நோலன் ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

''மும்பைக்குப் பயணம் செய்தபோது பாலிவுட் சினிமாவைப் பற்றிய ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நாம் சினிமாவை ரசிப்பதற்கான அடிப்படைக் காரணங்கள் பாலிவுட் படங்களில் இருப்பதாக உணர்கிறேன். ஹாலிவுட் சினிமா சில வழிகளில் அவற்றை இழந்துவிட்டது.

பாலிவுட் படங்கள் அற்புதமானவை. அவை பார்வையாளர்களின் உணர்வுகளைக் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துகின்றன. அவை ஹாலிவுட் சினிமாக்களுக்குள் மீண்டும் செலுத்தப்பட வேண்டிய மதிப்புமிக்க விஷயங்கள்.

இந்தியாவில் படமெடுப்பது அற்புதமான விஷயம். ‘தி டார்க் நைட் ரைஸஸ்’ படத்தின் சில காட்சிகளை ஜோத்பூரில் எடுத்தோம். ஆனால், மிக மிகக் குறைவான காலம்தான் அங்கு இருக்க முடிந்தது. அதன் பிறகு மீண்டும் அங்கு செல்ல விரும்பினேன்.

மும்பை நகரின் உள்ளூர் மக்களுடன் பழகியதை நான் மிகவும் ரசித்தேன். அவர்கள் தங்கள் நாட்டுப் படங்களை நேசிக்கிறார்கள். ஒரு இயக்குநராக எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உலகில் வேறு எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் அங்கு மக்கள் நம்மை வெறுப்போடு பார்ப்பார்கள். ஆனால், இந்தியாவில் மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள். நானும் சினிமாவை நேசிக்கிறேன். இது ஒரு உறுதியான பிணைப்பு''.

இவ்வாறு நோலன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x