பிரபல 'ஸ்டார் வார்ஸ்' வில்லன் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்

பிரபல 'ஸ்டார் வார்ஸ்' வில்லன் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்
Updated on
1 min read

'ஸ்டார் வார்ஸ்' படங்களில் டார்த் வேடார் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85.

ஜார்ஜ் லூகாஸ் இயக்கத்தில் 1977ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஸ்டார் வார்ஸ்'. திரைப்பட வரலாற்றில் மிக முக்கியத் திரைப்படமாகக் கருதப்படும் 'ஸ்டார் வார்ஸ்' பல திரைக் கலைஞர்களுக்கு இன்றளவும் முகவரியாக இருந்து வருகிறது. இதில் டார்த் வேடார் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பு நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

"85 வயதில் டேவிட் ப்ரவுஸ் காலமாகிவிட்டார். இது எங்களுக்கும், உலகம் முழுவதிலும் இருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களும் மிகப்பெரிய வருத்தத்தையும், மனதை அடைக்கும் துக்கத்தையும் தந்திருக்கிறது" என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் கட்டுதல் என்கிற பாடி பில்டிங், எடை தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் போட்டியிட்டவர் ப்ரவுஸ். 6 அடி 7 அங்குல உயரத்தில் இருந்த ப்ரவுஸ், டார்த் வேடார் என்கிற நிகரில்லாத வில்லன் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்திப் போனார். இந்தக் கதாபாத்திரத்துக்கான குரலை மட்டும் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் என்பவர் கொடுத்திருந்தார்.

முதல் மூன்று 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படங்களிலும் நடித்திருந்த ப்ரவுஸுக்கு அதன் பிறகு அந்த அளவு புகழைத் தேடித் தரும் கதாபாத்திரங்கள் அமையவில்லை. 'ஃப்ரான்கன்ஸ்டைன்' என்கிற கதாபாத்திரத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்பு ஸ்டான்ல் க்யூப்ரிக்கின் 'எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச்' திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால், எதுவுமே ஸ்டார் வார்ஸுக்கு நிகராக இல்லை.

'தி செய்ண்ட்', 'ஸ்பேஸ் 1999', 'டாக்டர் வூ' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த பிரவுஸ் தனது இறுதிக் காலத்தை லண்டனில் கழித்து வந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in