புகைப்படக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி

புகைப்படக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி
Updated on
1 min read

சர்வதேச அளவில் பிரபலமான மூத்த புகைப்படக் கலைஞர் டான் மெக்கல்லினின் வாழ்க்கைக் கதையை நடிகை ஏஞ்சலீனா ஜோலி திரைப்படமாக எடுக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். 'அன்ரீஸனபில் பிஹேவியர்' என்கிற பெயரில் தான் ஐந்தாவதாக இயக்கும் திரைப்படத்தை ஜோலி அறிவித்துள்ளார். இதே பெயரில் டான் மெக்கல்லின் என்கிற போர் புகைப்படக் கலைஞர் எழுதிய சுயசரிதையை அடிப்படையாக வைத்தே இந்தத் திரைப்படம் உருவாகிறது.

டாம் ஹார்டி மற்றும் டீன் பேக்கர் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர். பாஃப்தா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கதாசிரியர் க்ரெகோரி பர்க் திரைக்கதை எழுதுகிறார்.

இந்தப் படம் பற்றிப் பேசியுள்ள ஜோலி, "மெக்கல்லினின் வாழ்க்கையைத் திரைக்குக் கொண்டு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ஒரு பெருமையே. துணிச்சல் மற்றும் மனிதத்தன்மை என்கிற தனித்துவமான கலவை கொண்டு அவரது இயல்பு, போர்களின் உண்மைக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்கிற அவரது அர்ப்பணிப்பு, போரின் விளைவுகளால் பாதிக்கப்படுபவர்கள் மீது அவருக்கிருக்கும் பச்சாதாபம், மரியாதை ஆகியவை என்னை ஈர்த்தது.

டானின் புகைப்படங்களைப் போலவே இந்தத் திரைப்படத்தையும் எந்த சமரசமுமின்றி எடுக்க விரும்புகிறேன். அவர் சந்தித்த அற்புதம் மனிதர்கள், பார்த்த நிகழ்வுகள், பத்திரிகைத் துறையில் ஒரு விசேஷமான காலகட்டத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பதிவு செய்யவிருக்கிறேன்" என்று கூறியுளார்.

கிட்டத்தட்ட 60 வருடங்கள் புகைப்படக் கலைஞராக செயல்பட்ட மெக்கல்லினை, வியட்நாம் போரின் போது எடுத்த புகைப்படங்கள் தான் சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. ஜோலி கடைசியாக இயக்கியிருந்த 'ஃபர்ஸ்ட் தே கில்ட் மை ஃபாதர்' என்கிற திரைப்படமும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் தான். இதைப் பார்த்த பிறகு தனது சுயசரிதையை ஏஞ்சலீனா இயக்குவதில் மகிழ்ச்சியே என்று மெக்கல்லின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in