

ராக் நடிப்பில் வெளியான ‘தி ஸ்கார்பியன் கிங்' படத்தை மீண்டும் உருவாக்க யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிரபல WWE மல்யுத்த வீரரான ராக் ஜான்ஸன், 2001ஆம் ஆண்டு வெளியான ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ‘ஸ்கார்பியன் கிங்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் சிறிது நேரமே அந்தக் கதாபாத்திரம் வந்தாலும் அது ராக் ஜான்ஸனுக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. ஏற்கெனவே WWE உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராக் ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
அந்த ஸ்கார்பியன் கிங் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, ராக் நாயகனாக நடித்த ‘தி ஸ்கார்பியன் கிங்' திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. இப்படமும் உலகமும் முழுவதும் பெரும் வெற்றி பெற்று 178 மில்லியன் டாலர்களை வசூலில் குவித்தது.
இந்நிலையில் ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி ஸ்கார்பியன் கிங்' கதாபாத்திரத்தை ரீபூட் செய்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. மேலும் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ராக் ஜான்ஸனும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் ராக் நடிப்பதாகத் தெரியவில்லை. மாறாக ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்து ராக் ஜான்ஸன் கூறியுள்ளதாவது:
''வெள்ளித்திரையில் ‘ஸ்கார்பியன் கிங்’தான் எனது முதல் கதாபாத்திரம். இப்படத்தை மீளுருவாக்கம் செய்து அதை ஒரு புதிய தலைமுறைக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். அந்தக் கதாபாத்திரம் கிடைக்கவில்லையென்றால் நான் சினிமாவிலேயே இருந்திருக்க மாட்டேன். அது கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.