

அடுத்து வெளிவரவுள்ள 'நோ டைம் டு டை' ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில், தான் 007 கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்ததும் தன்னை இணையத்தில் பலர் அவதூறாகப் பேசினார்கள் என நடிகை லஷானா லின்ச் கூறியுள்ளார்.
'நோ டைம் டு டை' படத்தின் ட்ரெய்லரில், டேனியல் க்ரெய்க் கதாபாத்திரம் தலைமறைவாக இருக்க அவருக்குப் பதிலாக 007 பொறுப்புகளை லஷானா ஏற்பது போல காட்டப்பட்டிருந்தது. டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசிப் படம் இது. அடுத்தடுத்த படங்களில் யார் ஜேம்ஸ் பாண்டாக நடிப்பார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனால், இந்தப் படத்தில் 007 கதாபாத்திரத்தில் பிரிட்டனைச் சேர்ந்த கருப்பின நடிகையான லஷானா நடிக்கிறார் என்றதுமே பல ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்தனர்.
"ட்ரெய்லருக்குப் பிறகு நாம் எதிர்கொண்ட அவதூறிலிருந்து வெளியே வர, எனது சமூக ஊடகச் செயலிகளை நீக்கினேன். தியானம் செய்தேன். குடும்பத்தினரைத் தவிர யாரையும் சந்திக்கவில்லை. நான் ஒரு கருப்பினப் பெண். இன்னொரு கருப்பினப் பெண் நடிக்க வைக்கப்பட்டிருந்தாலும் இதேதான் நடந்திருக்கும். இதே தாக்குதல், இதே அவதூறுகள்தான். அதே நேரம் இப்படியான மாற்றம் குறித்த ஒரு உரையாடல் நடக்கிறது. மிகப் பெரிய புரட்சிகரமான ஒரு மாற்றத்தில் நானும் பங்கு வகிக்கிறேன் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
படத்தைப் பார்க்கும் கருப்பின மக்களுக்கு கண்டிப்பாக எனது கதாபாத்திரத்தின் அசலான (கருப்பினம் சார்ந்த) சித்தரிப்பு பிடிக்கும். படத்தைப் பார்க்க்கும் கருப்பின ரசிகர்கள் யதார்த்தத்தை நினைத்து யோசிக்கும்படி, அதே நேரம் திரையில் அவர்களது பிரதிநிதித்துவம் குறித்து மகிழ்ச்சி கொள்ளும்படி ஒரு தருணமாவது கதையில் இருக்குமா என்று நான் தேடினேன். இது நான் எப்படிப்பட்ட படத்தில் நடித்தாலும் சரி. கருப்பினப் பெண்ணாக எனது சித்தரிப்பு 100 சதவீதம் அசலாக இருக்க வேண்டும்" என்று லஷானா கூறியுள்ளார்.
கரோனா நெருக்கடியால் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 2021இல் 'நோ டைம் டு டை' வெளியாகிறது.