

ஆப்பிள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க முடியாது என மறைந்த நடிகர் ஷான் கானரி, ஸ்டீவ் ஜாப்ஸுக்குக் கடிதம் எதுவும் எழுதியதில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மூலம் சர்வதேச கவனம் பெற்ற நடிகர் ஷான் கானரி. கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, தனது 90-வது வயதில் காலமானார். இவர் 90களின் இறுதியில், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு எழுதியது என்று சொல்லப்படும் ஒரு கடிதம் இணையத்தில் பரவியது.
டைப்ரைட்டரில் அடிக்கப்பட்டிருந்த இந்தக் கடிதத்தில், ஆப்பிள் தயாரிப்புகளைப் பற்றிய விளம்பரத்தில் தன்னை நடிக்கக் கேட்டதால் ஷான் கானரி கோபத்துடன் பதில் அளித்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
"நான் ஆப்பிள் நிறுவனத்துக்கோ, வேறு எந்த நிறுவனத்துக்கோ எனது ஆன்மாவை விற்க மாட்டேன். எனக்கு நீங்கள் சொன்னதுபோல உலகை மாற்றுவதில் ஆர்வம் இல்லை. நீ கம்ப்யூட்டர் விற்பவன், நான் ஜேம்ஸ்பாண்ட்" என்று இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், உண்மையில் இந்தக் கடிதம், ஸ்கூப்பர்டினோ என்கிற நகைச்சுவை இணையதளத்தில் வந்த கற்பனைக் கடிதமே.
இதை நிஜமென நம்பி பத்திரிகையாளர்கள் சிலரே கடிதத்தைப் பகிர்ந்துள்ளனர்.
அப்படி ஒரு பத்திரிகையாளரின் ட்வீட்டைப் பார்த்த வயர்ட் செய்தி ஊடகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்டீவன் லெவி, "ஜான், உங்கள் பார்வைகளை மதிக்கிறேன். ஆனால் தயவுசெய்து இந்தக் கடிதம் போலி என்று சொல்லும் ஆதாரங்களைப் பாருங்கள். நல்ல மனிதர்கள் போலிச் செய்திகளைப் பகிரும்போது வருத்தமாக இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.
ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டு இந்தக் கடிதம் இணையத்தில் பரவியபோது அதை ஒரு சிலர் உண்மையென நம்பிப் பகிர்ந்தது நினைவுகூரத்தக்கது.