தனியார் தீவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: நெட்டிசன்கள் கோபத்துக்கு ஆளான கிம் கார்டேஷியன்

தனியார் தீவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: நெட்டிசன்கள் கோபத்துக்கு ஆளான கிம் கார்டேஷியன்
Updated on
1 min read

அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலம் கிம் கார்டேஷியனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பொதுமக்கள் பலர் இணையத்தில் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்காவில் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சம் தொட்டவர்கள் கார்டேஷியன் குடும்பத்தினர். இதில் கிம் கார்டேஷியன் தனது 40-வது பிறந்த நாளை ஒரு தனியார் தீவில், மிக விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.

இந்தக் கொண்டாட்டத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல், முகக்கவசங்கள் அணியாமல் பலர் கலந்துகொண்டனர். இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிம் பகிர்ந்துள்ளார்.

பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டபின், அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக விமானம் மூலம் தனியார் தீவுக்கு வரவழைத்ததாக கிம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "பலருக்கு இதுபோன்ற விஷயங்கள் இப்போது எட்டாத ஒன்றாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இப்படியான தருணங்களில்தான் நம் வாழ்க்கையில் எவ்வளவு சலுகைகள் உள்ளன என்பது நமக்கு நினைவுக்கு வருகிறது" என்று ஆரம்பித்து தனது கருத்துகளையும் கிம் பதிவிட்டிருந்தார்.

இதற்குக் கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் வந்துள்ளன. தற்போது நிலவி வரும் கரோனா நெருக்கடி, அதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனது கொண்டாட்டத்தைப் பற்றி இப்படிப் பச்சாதாபம் இன்றிப் பகிர்ந்திருக்கிறாரே எனப் பலரும் கிம்மைச் சாடியுள்ளனர்.

"இதுபோன்ற கொண்டாட்டங்கள் கோவிட்-19 இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி பலருக்குக் கிடைக்காது. அற்புதமான அவதானிப்பு".

"மக்கள் வேலையிழந்து, வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், இது மிகவும் சுயநலமானது. மேலும் இதில் கலந்துகொண்ட அனைவரும் அங்கு வருவதற்கு முன் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே".

"கரோனா மறைந்துவிட்டதா? அடக் கடவுளே! யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் நானும் பிரம்மாண்ட பார்ட்டி வைத்திருப்பேனே"

"பொதுமக்களைச் சந்திக்கும் பணியில் இருப்பதால் நான்கு மாதங்களாக நான் என் குடும்பத்தைப் பார்க்கவில்லை. எனது பலவீனமான பெற்றோருக்கு என்னால் கோவிட் வருமோ என்று அச்சத்தில் இருக்கிறேன். அனைத்தும் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது என்று நினைத்துக் கொண்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என நம்புகிறேன். ஆனால், நிஜ உலகில் வாழும் எங்களைப் போன்றவர்களைப் பற்றியும் சிந்தியுங்கள்".

இப்படியாகப் பல்வேறு வகையான வசவுகளும், கிண்டல்களும், கருத்துகளும் கிம்மின் பதிவுக்குப் பதிலாக வந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in