

மூத்த ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்க்வார்ஸ்நேகர் தனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்திருப்பதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் பகிர்ந்துள்ளார்
73 வயதான அர்னால்டுக்கு ஏற்கனவே ஒரு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இம்முறை இதயத்தில் இருக்கும் பெருநாடி வால்வை மாற்ற அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அர்னால்ட், "க்ளீவ்லேண்ட் மருத்துவமனைக்கு நன்றி. எனக்கு இப்போது போன அறுவை சிகிச்சையில் வைக்கப்பட்ட புதிய நுரையீரல் வால்வோடு சேர்த்து புதிதாக பெருநாடி வால்வும் இருக்கிறது. நான் அற்புதமாக உணர்கிறேன்.
க்ளீவ்லேண்ட் தெருக்களில் நடந்து, உங்கள் சிலைகளை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். என் குழுவில் இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை படுக்கையிலிருந்தபடி கட்டை விரலை உயர்த்திக் காட்டும் ஒரு புகைப்படமும், க்ளீவ்லேண்டைப் பார்க்கும் ஒரு புகைப்படத்தையும் அர்னால்ட் பகிர்ந்துள்ளார். அர்னால்டுக்கு 2018 ஆண்டு, லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நுரையீரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பிறவியிலேயே இதயத்தில் பிரச்சினை இருந்ததால் ஏற்கனவே 1997ஆம் ஆண்டு இந்த வால்வு அவருக்கு மாற்றப்பட்டது.
கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான 'டெர்மினேட்டர் டார்க் ஃபேட்' திரைப்படத்தில் அர்னால்ட் நடித்திருந்தார்.