

நடிகை கால் கேடட் க்ளியோபாட்ராவின் பயோபிக்கில் நடிக்கவுள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'வொண்டர் வுமன்' கதாபாத்திரம் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகை கால் கேடட் தற்போது பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் க்ளியோபாட்ராவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கிறார்.
'வொண்டர் வுமன்' திரைப்படத்தின் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் 'வொண்டர் வுமன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 'வொண்டர் வுமன் 1984', வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ளியோபாட்ரா படத்தில் நடிப்பது குறித்து கால் கேடட், "எனக்கு புதிய பயணங்கள் மேற்கொள்வது பிடிக்கும். புதிய படைப்புகளில் இருக்கும் ஆர்வம் பிடிக்கும். புதிய கதைகளை உயிர்ப்பிக்கும் ஆச்சரியம் பிடிக்கும். நீண்ட நாட்களாக நான் சொல்ல விரும்பிய கதை க்ளியோபாட்ராவினுடையது. இந்த அணிக்கு நன்றி சொல்லித் தீராது" என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ள கேடட், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களை இதில் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக 1963-ம் ஆண்டு, நடிகை எலிசபெத் டெய்லர் க்ளியோபாட்ராவாக நடித்தார். இந்தத் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதற்கு முன் 1934-ம் ஆண்டும் க்ளியோபாட்ராவைப் பற்றிய திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.