

டிஸ்னி மற்றும் பிக்ஸாரின் அனிமேஷன் திரைப்படமான 'ஸோல்' நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன. இந்தச் சூழலில் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஒரு சில நாடுகளில் பல விதிமுறைகளுக்கு நடுவில் திரையரங்குகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வந்தாலும் முழு வீச்சில் ரசிகர்கள் திரையரங்குக்கு வரத் தயாராக இல்லை. சமீபத்தில் வார்னர் பிரதர்ஸ் வெளியிட்ட 'டெனெட்' திரைப்படத்தின் வெளியீடு இதை நிரூபித்தது. மேலும் சமீபத்தில் அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய திரைப்படச் சங்கிலியான ரீகல் சினிமாஸ், தங்களின் 500க்கும் அதிகமான திரையரங்குகளைத் தற்காலிகமாக மூடப்போவதாக அறிவித்துவிட்டது.
எனவே, கரோனா தடுப்பு மருந்து வரும் வரை ரசிகர்கள் நிச்சயமாக திரையரங்குக்கு வர அச்சப்படுவார்கள் என்று பலரும் தீர்மானித்துவிட்டனர். இந்த நிலையில் ஏற்கெனவே தங்களின் 200 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் கொண்ட 'முலன்' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்ட டிஸ்னி நிறுவனம், அடுத்ததாகத் தாங்கள் தயாரித்திருக்கும் 'ஸோல்' திரைப்படத்தையும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று நேரடியாக வெளியிடுகிறது. டிஸ்னி ப்ளஸ் இல்லாத நாடுகளில் திரையரங்கில் வெளியாகும் என்றாலும் அதற்கான தேதி முடிவாகவில்லை.
முதலில் ஜூன் மாதம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த 'ஸோல்', கரோனா நெருக்கடியை அடுத்து நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தத் தேதியில் வெளியாவதும் சந்தேகமே என ஹாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், யூனிவர்ஸல் நிறுவனம் தங்களின் அனிமேஷன் காமெடி திரைப்படமான 'தி க்ரூட்ஸ்: எ நியூ ஏஜ்' வெளியீட்டை இதே நவம்பர் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்ததால் கண்டிப்பாக டிஸ்னி தனது தேதியை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே தற்போது டிசம்பர் 25 அன்று 'ஸோல்' வெளியாகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்துக்கு சந்தா கட்டியிருந்தாலும், 'முலன்' திரைப்படம் வெளியாகும்போது அதற்காகத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால் 'ஸோல்' திரைப்படத்துக்கு அப்படித் தனிக் கட்டணம் இல்லாமல், ஓடிடிக்கான சந்தா கட்டணத்திலேயே பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6.5 கோடி சந்தாதாரர்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
விடுமுறைக் காலத்தில் குடும்பத்துடன் கண்டுகளிக்க ஒரு விருந்தாக இந்தப் படம் இருக்கும் என டிஸ்னி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.