'லயன் கிங்' படத்தின் அடுத்த பாகம்: டிஸ்னி அறிவிப்பு

'லயன் கிங்' படத்தின் அடுத்த பாகம்: டிஸ்னி அறிவிப்பு
Updated on
1 min read

'லயன் கிங்' படத்தின் அடுத்த பாகம் தயார் ஆகிறது. ஆஸ்கர் விருது வென்ற 'மூன்லைட்' திரைப்படத்தின் இயக்குநர் பேரி ஜென்கின்ஸ் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

1994-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான 'லயன் கிங்', அப்போதே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதன் 3டி, தத்ரூப அனிமேஷன் ரீமேக் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படமும் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து வெற்றி கண்டது நினைவுகூரத்தக்கது.

இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான 'லயன் கிங்' ரீமேக் பதிப்பின் தொடர்ச்சியாக இந்தக் கதை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் இது அசல் கதைக்கு முன்னால் நடந்த சம்பவங்களை விவரிக்கும் பின் கதையாக இருக்கும் என்றும் சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-ல் வெளியான 'லயன் கிங்' படத்துக்கு திரைக்கதை எழுதிய ஜெஃப் நாதன்சன் தான் இந்தப் படத்துக்கும் திரைக்கதை எழுதவுள்ளார். இதனை பேரி ஜென்கின்ஸ் இயக்கவுள்ளார்.

இது தொடர்பான பேரி ஜென்கின்ஸ் கூறியிருப்பதாவது:

"எனது சகோதரி, அவரது இரண்டு மகன்களை வளர்க்க உதவியிருக்கிறேன். எனவே 90-களில் இந்தக் கதாபாத்திரங்களுடன்தான் நான் வளர்ந்தேன். நட்பு, அன்பு, மரபைப் பற்றிய இந்த அற்புதமான கதையை இன்னும் விரிவாக்க, டிஸ்னியுடன் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தக் கதையின் விரிவாக்கத்தில், ஆப்பிரிக்க இன மக்களின் வாழ்க்கையையும், ஆன்மாக்களையும் சேர்த்து ஆவணப்படுத்துவது என் கனவு நிஜமானதைப் போல".

இவ்வாறு பேரி ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in