

'அவதார் 2' மற்றும் 3-ம் பாகங்களின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தில் இருப்பதாக பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
நடிகர் அர்னால்ட் ஸ்குவாஸ்நேகருடனான ஒரு உரையாடலில் 'அவதார் 2'-ம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், 3 ஆம் பாகப் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
"எல்லோரையும் போல எங்களையும் கோவிட் பாதித்தது. கடுமையாகப் பாதித்தது. நான்கரை மாதங்களை இழந்தோம். இதனால் பட வெளியீடு முழுதாக ஒரு வருடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் செய்துவிட்டோம்.
இப்போது நியூசிலாந்து படப்பிடிப்பில் இருக்கிறேன். (3-ம் பாகத்துக்கான) நடிகர்களை வைத்து முடிக்க வேண்டிய 10 சதவீதப் படப்பிடிப்பு மீதமுள்ளது. 'அவதார் 2' முழுமையாக முடிந்துவிட்டது. 3-ம் பாகம் 95 சதவீதம் முடிந்துவிட்டது" என்று ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
2021 டிசம்பரில் வெளியாகவிருந்த 'அவதார் 2' தற்போது 2022 டிசம்பரில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சிகோர்னி வீவர், சாம் வொர்திங்க்டன், ஸோயி ஸல்டானா ஆகியோர் மீண்டும் நடிக்கவுள்ளனர்.