பேட்மேனுக்கான விளக்கத்தை ஒவ்வொரு தலைமுறையும் தரும்: கிறிஸ்டோஃபர் நோலன்

பேட்மேனுக்கான விளக்கத்தை ஒவ்வொரு தலைமுறையும் தரும்: கிறிஸ்டோஃபர் நோலன்
Updated on
1 min read

பெரிய திரையில் பேட்மேன் கதாபாத்திரத்துக்கான நியாயத்தைக் கொடுக்க, அந்தக் கதாபாத்திரத்துக்கான விளக்கங்கள் மீண்டும் தரப்பட வேண்டியது அவசியம் என்று இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் கூறியுள்ளார்.

'பேட்மேன் பிகின்ஸ்', 'டார்க் நைட்', 'டார்க் நைட் ரைஸஸ்' ஆகிய மூன்று பேட்மேன் திரை வரிசைப் படங்களை நோலன் இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுமே உலக அளவில் மிகப்பெரிய வசூலையும், ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ளது. நோலனுக்கு முன் டிம் பர்டன், ஜோயல் ஷூமேகர் ஆகியோரும் பேட்மேன் திரைப்படங்களை எடுத்துள்ளனர். தற்போது மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் ராபர்ட் பேட்டின்ஸன், புதிய பேட்மேனாக நடிக்கிறார்.

சமீபத்தில் நோலன் அளித்துள்ள பேட்டியில், சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

"பேட்மேன் பிகின்ஸுக்கு முன்னால் டிசி தயாரிப்பு நிறுவனத்திடம் நான் பேசும்போது தெரிந்துகொண்ட முதல் விஷயங்களில் ஒன்று, பேட்மேன் கதாபாத்திரம் என்பது மீண்டும் மீண்டும் விளக்கிச் சொல்வதைச் சார்ந்து இருக்கிறது என்பதுதான். ஒவ்வொரு தலைமுறையும் அதற்கான ஒரு புதிய விளக்கத்தைத் தரும். அதுதான் இந்தக் கதாபாத்திரத்தை இன்று வரை புதிதாக வைத்திருக்கிறது" என்று நோலன் கூறியுள்ளார்.

தற்போது நோலன் இயக்கத்தில் சர்வதேச நாடுகளில் வெளியாகியுள்ள 'டெனெட்' திரைப்படத்தில் ராபர்ட் பேட்டின்ஸன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பேட்டின்ஸன் பேட்மேனாக நடிப்பது குறித்துப் பேசியிருக்கும் நோலன், "அவருடன் பணியாற்றியதை வைத்து இதை முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன். அவர் கவனம் செலுத்தினால் அவரால் எந்த விதமாகவும் நடிக்க முடியும். பேட்மேனாக அவர் திரையில் எப்படி நடிப்பார் என்பதைப் பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 2021-ல் 'தி பேட்மேன்' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in