கரோனா நெருக்கடியிலும் 53 மில்லியன் வசூலித்த ‘டெனெட்’

கரோனா நெருக்கடியிலும் 53 மில்லியன் வசூலித்த ‘டெனெட்’
Updated on
1 min read

கரோனா நெருக்கடியால் உலக அளவில் பொதுமக்கள் கூடும் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் பல மாதங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் புதிதாக வெளியாகவிருந்த பல திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கின. சில படங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. சில சர்வதேச நாடுகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா தொற்று குறைந்துள்ள சில நாடுகளில் ‘எக்ஸ் மென்: தி ந்யூ ம்யூடண்ட்ஸ்’, க்றிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ ஆகிய படங்கள் முதலில் வெளியாகியுள்ளன. இதில ‘டெனெட்’ படத்துக்கு வெளியான அனைத்து நாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பிரிட்டன், கனடா, தென் கொரியா உள்ளிட்ட 41 நாடுகளில் வெளியாகியுள்ள ‘டெனெட்’ திரைப்படம் ஐந்து நாட்களில் 53 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகை என வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் டோபி எம்மரிச் கூறும்போது, ''இது ஒரு அற்புதமான தொடக்கம். இதுபோன்ற எதிராபாராத சூழல்களில் இந்த உலகளாவிய வெளியீட்டில் நாங்கள் ஓடுவது மாரத்தான் போட்டியில்தான் என்பதை நாங்கள் அறிந்தே வைத்திருந்தோம். எனவே, நாங்கள் எதிபார்த்ததை விட பெரிய சாதனை இது. வரும் வாரங்களில் இந்தப் படம் இன்னும் அதிக நாட்கள் ஓடும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

200 மில்லியன் பட்ஜெட் செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் வெளியானால், 500 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 3 அன்று இப்படம் அமெரிக்காவில் வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in