கரோனா நெருக்கடி; 'டெனெட்' படம் பார்க்க திரையரங்குக்குச் சென்ற டாம் க்ரூஸ்: வைரலாகும் காணொலி

கரோனா நெருக்கடி; 'டெனெட்' படம் பார்க்க திரையரங்குக்குச் சென்ற டாம் க்ரூஸ்: வைரலாகும் காணொலி
Updated on
1 min read

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் 'டெனெட்' திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்த அனுபவத்தை நடிகர் டாம் க்ரூஸ் பகிர்ந்துள்ளார்.

கரோனா நெருக்கடியால் உலக அளவில் பல மாதங்கள் பொதுமக்கள் கூடும் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் புதிதாக வெளியாகவிருந்த பல திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கின. சில படங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. சில சர்வதேச நாடுகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளன.

திரையரங்குகள் திறந்து முதலில் வெளியாகும் பிரம்மாண்டமான திரைப்படமாக கிறிஸ்டோபர் நோலனின் 'டெனெட்' உள்ளது.

பிரிட்டனில் வரும் வாரம் வெளியாகவுள்ள 'டெனெட்' திரைப்படத்தின் விசேஷத் திரையிடல் பல நகரங்களில் நடந்து வருகிறது. அப்படி லண்டனில் நடந்த திரையிடலுக்கு, பிரிட்டனில் 'மிஷன் இம்பாஸிபிள் 7' படத்துக்கான படப்பிடிப்பில் இருக்கும் டாம் க்ரூஸ் சென்று வந்துள்ளார். இதுபற்றி ஒரு சிறிய காணொலியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முகக் கவசம் அணிந்துகொண்டு, காரில் திரையரங்குக்குச் செல்லும் டாம் க்ரூஸ், வெளியே தன்னைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் கையசைத்துச் செல்கிறார். திரையரங்குக்கு வெளியே இருக்கும் 'டெனெட்' விளம்பரப் பலகை முன் நின்று ''இதோ மீண்டும் அரங்குக்கு வந்துவிட்டோம்'' என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

'மிஷன் இம்பாஸிபிள் 7' இயக்குநர் கிறிஸ்டோஃபர் மெக்கொயரும் க்ரூஸுடன் படம் பார்க்கிறார். படம் முடிந்து வெளியே செல்லும் முன், "மீண்டும் திரையரங்குக்கு வந்தது அற்புதமாக இருக்கிறது. படம் மிகவும் பிடித்திருந்தது" என்று சொல்கிறார்.

இந்தக் காணொலியை, "பிரம்மாண்ட திரைப்படம், பெரிய திரை, மிகவும் பிடித்திருந்தது" என்று குறிப்பிட்டு டாம் க்ரூஸ் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் முறைக்கும் அதிகமாக இந்தக் காணொலி பார்க்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in