

'ப்ளாக் ஆடம்' கதாபாத்திரத்தின் வருகையினால் சூப்பர் ஹீரோ உலகில் இருக்கும் படிநிலையே மாறும் என்று நாயகன் ட்வைன் ஜான்ஸன் கூறியுள்ளார்.
டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள் இணையம் வழியாக நடந்த 'டிசி ஃபேன்டம்' என்ற பொது நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று ரசிகர்களுடன் பகிரப்பட்டன. இதில் புதிதாகத் தயாராகவுள்ள 'ப்ளாக் ஆடம்' திரைப்படம் பற்றிய அறிமுகமும் நடந்தது. இதில் நாயகன் ப்ளாக் ஆடமாக பிரபல நடிகரும் முன்னாள் ரெஸ்ட்லிங் நட்சத்திரமுமான ட்வைன் 'ராக்' ஜான்சன் நடிக்கிறார். இப்போதுதான் இந்தப் படம், கதாபாத்திரத்துக்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.
5000 வருடங்களுக்கு முன்னால் கண்டாக் என்ற ராஜ்ஜியத்தில் மாய மந்திரமும், அளவற்ற சக்தியும் நிரம்பியுள்ளன. இந்த நாட்டில் அடிமைகளில் ஒருவனாக இருந்தவன் ப்ளாக் ஆடம். அங்கு நடந்த அநீதிகளைத் தட்டிக் கேட்ட ப்ளாக் ஆடமை அரசு சிறைப்படுத்த 5000 வருடங்கள் கழித்து மீண்டும் உயிர்த்தெழுகிறான். இதுவே 'ப்ளாக் ஆடம்' பற்றிய முன் கதையாக இந்நிகழ்ச்சியில் சிறிய காணொலி ஒன்று, ஜான்சனின் வர்ணனையில் வெளியிடப்பட்டது. டிசி காமிக்ஸ் கதைப்படி ப்ளாக் ஆடம் ஷஸாம் கதாபாத்திரத்தின் எதிரி. ஆனால் ஒரு எதிர்நாயகன் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படம் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார் ட்வைன் ஜான்சன், "உங்களது அதிக எதிர்பார்ப்புகளையும் விஞ்சுவோம் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். வழக்கமாகத் தீயவர்களைப் பிடிக்கும் போது சூப்பர்ஹீரோக்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டைக் காட்டுவார்கள். ஆனால் ப்ளாக் ஆடம் கட்டுப்பாடு இல்லாத கதாபாத்திரம். மிகவும் ஆபத்தான அதே சமயம் மிகவும் விரும்பத்தக்க ஒரு கதாபாத்திரம்.
டிசி உலகின் அதிக சக்தியுடவர்கள் யார் என்கிற படிநிலையே மாறப்போகிறது. சூப்பர்மேனுடன் மோதுவதும் உற்சாகமாகவே இருக்கும். ஏனென்றால் எங்கள் இருவரின் சக்திகளும் ஒரே மாதிரி இருக்கும். இருவரும் நண்பர்களாகலாம், அல்லது எதிரியாகவும் ஆகலாம்" என்று கூறியுள்ளார்.
கடந்த 10 வருடங்களாக 'ப்ளாக் ஆடம்' கதாபாத்திரத்தை வைத்து திரைப்படம் எடுக்க ஜான்சன் முயற்சித்து வருகிறார். தற்போது வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ஜான்ஸன் நடித்துள்ள 'ஜங்கிள் க்ரூஸ்' படத்தை இயக்கியிருக்கும் ஆமே காலெட் செரா இயக்குகிறார். கரோனா நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு துவங்கப்படாமல் உள்ளது.