

சீனாவில் மறு வெளியீடு செய்யப்பட்ட ஹாரிபாட்டர் திரை வரிசையின் முதல் பாகமான 'ஹாரிபாட்டர் அண்ட் தி ஸார்ஸரர்ஸ் ஸ்டோன்' அங்கு அதிக வசூலைப் பெற்று வருகிறது.
சீனாவில் கரோனா பீதி ஓய்ந்து திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் புதிதாக திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் பழைய பிரபல திரைப்படங்களை மீண்டும் வெளியிட ஆரம்பித்துள்ளனர்
அப்படி 2001-ம் ஆண்டு வெளியான 'ஹாரிபாட்டர் அண்ட் தி ஸார்ஸரர்ஸ் ஸ்டோன்' திரைப்படம் 3டி மற்றும் ஐமேக்ஸ் பதிப்புகளாகக் கிட்டத்தட்ட 16,000 திரைகளில் சீனாவில் மீண்டும் வெளியானது. வெளியான முதல் வார இறுதியிலேயே 13.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் அந்தத் திரைப்படத்தின் மொத்த வசூல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. ஹாரிபாட்டர் திரை வரிசையில் இதற்கு முன், கடைசியாக வெளியான 'ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் - பாகம் 2' மட்டுமே ஒரு பில்லியன் டாலர் வசூலைக் கடந்திருந்தது. தற்போது முதல் பாகமும் 1 பில்லியன் டாலர் வசூல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஹாரிபாட்டர் திரைவரிசையில் வெளியான 8 திரைப்படங்கள், இதுவரை மொத்தமாக 7.74 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'ஹாரிபாட்டர் அண்ட் தி ஸார்ஸரர்ஸ் ஸ்டோன்', புதிய தலைமுறை ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதில் தங்களுக்கு மகிழ்ச்சி என்றும், இந்தக் கதைகள் காலத்தையும், எல்லைகளையும் கடந்தவை என்பதையே இந்த வசூல் நிரூபிப்பதாகவும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச விநியோகஸ்த பிரிவின் தலைவர் ஆண்ட்ரூ க்ரிப்ஸ் கூறியுள்ளார்.
ஜனவரி 2002-ம் ஆண்டு தான் சீனாவில் முதன் முதலில் 'ஹாரிபாட்டர் 1' வெளியானது. ஆனால் அப்போது சீனாவில் இந்த அளவுக்குத் திரைகள் இல்லை. இப்போது இந்தத் திரைப்படம் 3 நாட்களில் வசூலித்திருக்கும் 13 மில்லியன் டாலர்கள் என்பது அப்போது மொத்த ஓட்டத்திலும் ஹாரிபாட்டர் 1 வசூலிக்காத தொகை என்பது நினைவுகூரத்தக்கது.