'பேட்மேன்' கதாபாத்திரத்துக்காக கிறிஸ்டோஃபர் நோலனிடம் பொய் சொன்ன பேட்டின்ஸன்

'பேட்மேன்' கதாபாத்திரத்துக்காக கிறிஸ்டோஃபர் நோலனிடம் பொய் சொன்ன பேட்டின்ஸன்
Updated on
1 min read

'பேட்மேன்' திரைப்படத்தின் நடிகர் தேர்வில் கலந்துகொள்ள இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனிடம் தான் பொய் சொன்னதாக நடிகர் ராபர்ட் பேட்டின்ஸன் கூறியுள்ளார்.

'ட்வைலைட்' படங்கள் மூலம் பிரபலமானவர் ராபர்ட் பேட்டின்ஸன். புதிய 'பேட்மேன்' மறு உருவாக்கத்தில் இவரே பேட்மேனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை மேட் ரீவ்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் நடிகர் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது பேட்டின்ஸன், கிறிஸ்டோஃபர் நோலனின் 'டெனட்' படத்தின் படப்பிடிப்பில் இருந்தார்.

இதுபற்றி சமீபத்தில் பேட்டின்ஸன் அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது:

"நோலன் எப்போதுமே அவரது படங்கள் குறித்து பயங்கரமாக ரகசியம் காப்பார். எனவே நானும் 'பேட்மேன்' பற்றி ரகசியம் காக்க வேண்டியிருந்தது. இப்போது நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது.

பேட்மேனின் நடிகர் தேர்வுக்குச் செல்வதற்காக, 'குடும்பத்தில் ஒரு அவசர நிலை, நான் போக வேண்டும்' என்று நோலனிடம் சொன்னேன். நான் சொல்லி முடித்தவுடனேயே, 'பேட்மேன் நடிகர் தேர்வுக்குத் தானே செல்கிறீர்கள்?' என்று கேட்டார்".

இவ்வாறு பேட்டின்ஸன் கூறியுள்ளார்.

பேட்மேன் கதைக்குத் திரையில் புத்துயிர் கொடுத்தவராக கிறிஸ்டோஃபர் நோலன் பார்க்கப்படுகிறார். 'பேட்மேன் பிகின்ஸ்', 'டார்க் நைட்', 'டார்க் நைட் ரைஸஸ்' என மூன்று பேட்மேன் திரைப்படங்கள் மூலம் அந்தத் திரை வரிசைக்கே புது அர்த்தம் கொடுத்தவராக நோலனை ஹாலிவுட் புகழ்ந்துள்ளது.

தற்போது 'டெனட்' என்கிற அறிவியல் புனைவுக் கதையை எடுத்து முடித்துள்ளார். கோவிட் நெருக்கடி காரணமாகப் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் நேரத்தில், 'டெனட்' கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே வெளியாகும். பெரிய திரைக்காக எடுக்கப்பட்ட படம் இது என வார்னர் பிரதர்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in