ஐந்தாவது சீசனோடு நிறைவு பெறும் ‘மணி ஹெய்ஸ்ட்’

ஐந்தாவது சீசனோடு நிறைவு பெறும் ‘மணி ஹெய்ஸ்ட்’
Updated on
1 min read

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பானிஷ் தொடர் ‘மணி ஹெய்ஸ்ட்’. வங்கிக் கொள்ளை தொடர்பான கதைக்களம் கொண்ட இத்தொடரின் நான்காவது சீஸன் இந்த ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டடித்தது.

நெட்ஃப்ளிக்ஸில் அதிக முறை பார்க்கப்பட்ட வெப் சீரிஸ்களில் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரும் ஒன்று. இத்தொடரின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றான புரொபஸருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் இத்தொடரின் ஐந்தாம் மற்றும் இறுதி சீசனுக்கான படப்பிடிப்பு ஸ்பெயினில் நேற்று (03.08.20) தொடங்கப்பட்டது. தொடர்ந்து போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘மணி ஹெய்ஸ்ட்’ குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''இந்தத் தொடரின் முடிவை எப்படி அமைப்பது என்று சிந்திப்பதிலேயே ஒரு ஆண்டு காலத்தை நாங்கள் செலவிட்டோம். இந்த சீசனில் புரொபஸர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்றும் நாங்கள் ஆலோசித்தோம். அதற்கான பதில்தான் ‘மணி ஹெய்ஸ்ட்’ ஐந்தாவது சீசன். இந்த யுத்தம் அதன் மிக தீவிரமான மற்றும் மோசமான நிலைகளை அடைகிறது, ஆனால் இது மிகவும் அற்புதமான ஒரு சீசனாக இருக்கும். மேலும் இதுவே இறுதி சீசனாகவும் இருக்கும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடர் அடுத்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in