தயாராகிறதா 'கில் பில்- 3'?- டாரன்டினோவின் அடுத்த படம் குறித்து எகிறும் எதிர்பார்ப்பு

உமா தர்மான்
உமா தர்மான்
Updated on
3 min read

உலக சினிமா ரசிகர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த படங்களில் குவென்டின் டாரன்டினோ இயக்கிய ‘கில் பில்’ படத்திற்கு என்றும் நிலையான இடம் உண்டு. இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தை டாரன்டினோ இயக்குவாரா எனும் எதிர்பார்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது.

பேட்ரிக்ஸ் கிடோ எனும் பெண் தன் வாழ்க்கையைச் சீரழித்த தன் முன்னாள் காதலனையும், அவள் பணிபுரிந்த கொலைகாரக் கும்பலின் தலைவனுமான பில் என்ற நபரைக் கொல்லும் கதைதான் ‘கில் பில்’. பில்லைக் கொலை செய்ய, தான் மேற்கொள்ளும் பயணத்தில் தன் முன்னாள் கூட்டாளிகள் ஒவ்வொருவரையும் கொன்றழித்தபடி முன்னேறுவாள் கிடோ. இரண்டு படங்களிலும் ரத்தம் தெறிக்கும் வன்முறையை அழகியலுடன் கலந்து உருவாக்கியிருந்தார் டாரன்டினோ. உமா தர்மான், லூசி லியூ, டேவிட் கேரடைன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படங்களை இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ‘கில் பில்’ படத்தின் 3-ம் பாகத்திற்கான போஸ்டர் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்’ மற்றும் ‘ஸ்பைடர் மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம்’ போன்ற படங்களின் கதாநாயகியான ஸெண்டையாவின் படத்துடன் ‘கில் ப்ரைட்’ (Kill Bride) என்ற பெயருடன் வெளியான போஸ்டர் இணையம் எங்கும் தீயாகப் பரவியது. ஆனால், இது அதிகாரபூர்வ அறிவிப்பு அல்ல, இன்னும் ‘கில் பில்’ படத்தின் மூன்றாம் பாகத்தைப் பற்றிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்று ஹாலிவுட்டின் உள் வட்டாரங்கள் அறிவித்தன. டாரன்டினோவின் தீவிரமான ரசிகர் ஒருவர் உருவாக்கிய போஸ்டர் இது என்று பின்னர்தான் ரசிகர்கள் அறிந்து கொண்டார்கள்.

எல்லாம் சரி, எதற்காகச் சம்பந்தம் இல்லாமல் ஸெண்டையாவை வைத்து ‘கில் பில்’ மூன்றாம் பாகத்துக்கான போஸ்டரை உருவாக்க வேண்டும்? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஒரு சிறந்த திரைக்கதை என்பது பல ஆழமான கிளைக் கதைகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க முடியும். படத்தின் மையக் கதாபாத்திரம் மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களையும் மிக கவனமாக உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியம். அட்டகாசமான திரைக்கதைகளை மட்டுமல்லாமல், தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் குணாதிசயங்களை உருவாக்குவதில் வல்லவர் டாரன்டினோ. அப்படி அவர் உருவாக்கிய படமான ‘கில் பில்’ படத்தில் பல ஆழமான கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் வெர்னிடா க்ரீன் என்ற கதாபாத்திரம்.

படத்தின் பிரதான கதாபாத்திரமான கிடோ, வில்லனான பில்லைக் கொல்ல ஆரம்பிக்கும் பயணத்தில், அவள் சந்திக்கும் முதல் எதிரி வெர்னிடா க்ரீன். பேட்ரிக்ஸ் கிடோவின் முன்னாள் கூட்டாளியான வெர்னிடா க்ரீனை அவளின் நான்கு வயது மகள் நிக்கி முன்னிலையிலேயே கொல்ல வேண்டிய கட்டாயம் பேட்ரிக்ஸ் கிடோவுக்கு ஏற்பட்டுவிடும். தன் கண் முன் தாய் கொல்லப்பட்டு இறந்து கிடப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கும் நிக்கியிடம், “உன் முன்னிலையில் இதைச் செய்ய நான் விரும்பவில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது உன் தாயே தேடிக்கொண்ட முடிவு. நீ வளர்ந்து பெரியவள் ஆன பின்பும் உன் மனதில் இப்போது நடந்த விஷயத்தைப் பற்றி வன்மம் இருந்தால், உனக்காக நான் காத்திருப்பேன்” என்று கிடோ கூறுவாள்.

இந்த வசனத்தின் நீட்சியாகத்தான் ‘கில் பில்’ படத்தின் மூன்றாம் பாகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வெர்னிடா க்ரீன் கதாபாத்திரத்தின் மகள் நிக்கி வளர்ந்து பெரியவளாகி தன் தாயின் கொலைக்குப் பழி தீர்க்க பேட்ரிக்ஸ் கிடோவைத் தேடிப்போகும் பயணம்தான் ‘கில் பில் -3’ ஆக இருக்கப் போகிறது என்று கூறலாம். வெர்னிடா க்ரீன் கதாபாத்திரத்தில் நடித்த விவிகா ஏ.ஃபாக்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் மகள் கதாபாத்திரமான நிக்கி கதாபாத்திரத்தில் தற்போது ஸெண்டையா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். அதற்குப் பிறகுதான் ‘கில் பில்’ ரசிகர்களின் கவனம் ஸெண்டையாவின் மேல் திரும்பியது.

குவென்டின் டாரன்டினோ
குவென்டின் டாரன்டினோ

சில மாதங்களுக்கு முன்பு டாரன்டினோ அளித்த பேட்டியில், ‘கில் பில்’ படத்தின் மூன்றாம் பாகத்தைப் பற்றி கதாநாயகி உமா தர்மானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். சீக்கிரம் திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுபெறும் யோசனையிலிருந்து வருகிறார் டாரன்டினோ. இதுவரை இவர் பத்துப் படங்களை இயக்கியுள்ளார். தன்னுடைய 11-வது படமாக ‘கில் பில்’ படத்தின் மூன்றாவது பாகத்தை ரசிகர்களுக்குக் கொடுத்துவிட்டு அவர் ஓய்வு பெறுவார் என்றே ஹாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மாபெரும் கலைஞன் வெறும் 11 படங்கள் மட்டுமே கொடுத்துவிட்டு ஓய்வு பெறுகிறாரே என்ற கவலை உலக சினிமா ரசிகர்களுக்கு இருந்தாலும், அவரின் கடைசிப் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாகக் கூடியுள்ளது.

டாரன்டினோவின் மனதில் இருக்கும் திட்டம் என்ன என்பதுதான் தற்போது ஹாலிவுட் ரசிகர்களின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி.

- க.விக்னேஷ்வரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in