

மைக்கேல் கீடன், வால் கில்மர், ஜார்ஜ் க்ளூனி உள்ளிட்ட பல நடிகர்கள் பேட்மேன் கதாபாத்திரத்தில் இதுவரை நடித்துள்ளனர். ஆனால், கிறிஸ்டியன் பேல் நடிப்பில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வந்த 'பேட்மேன் பிகின்ஸ்' திரைப்படம்தான், பேட்மேன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதைச் சொல்லியது.
'டார்க் நைட்', 'டார்க் நைட் ரிட்டர்ன்ஸ்' படங்களுக்குப் பிறகு ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆஃப்லெக் பேட்மேனாக நடிக்க, 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்கள் வெளியாயின.
தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ், 'தி பேட்மேன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் பேட்மேனின் கோதம் நகரைப் பற்றிய வெப் சீரிஸ் ஒன்றை மேட் ரீவ்ஸ் தயாரிக்கவுள்ளார்.
இதுகுறித்து மேட் ரீவ்ஸ் கூறியுள்ளதாவது:
''இந்த சீரிஸ் மூலம் பேட்மேன் தொடர்பான உலகத்தையும் அதில் உள்ள எண்ணற்ற, சிக்கலான கதாபாத்திரங்களையும் அலச முடியும். இந்த சீரிஸ் ஒரு அற்புதமான வாய்ப்பு. நான் உருவாக்கிவரும் படத்தில் இருக்கும் உலகத்தைப் பற்றிய விரிவாக்கமாக மட்டும் இல்லாமல் அதன் ஆழங்களுக்குச் சென்று அலசுவதாக இருக்கும்''.
இவ்வாறு ரீவ்ஸ் கூறியுள்ளார்.