மீண்டும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் இணையும் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்?

மீண்டும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் இணையும் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்?
Updated on
1 min read

2008-ம் ஆண்டு வெளியான ‘அயர்ன்மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, கடந்த ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிந்தது. இதில் அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ராபர்ட் டவுனி ஜூனியர். இவருக்கு உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவரது அலட்சியமான உடல்மொழியும், கிண்டல் நிறைந்த பேச்சும் ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரம் இறந்துவிடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டதால் இனி வரும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் இனி இவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்துவருகிறது.

இது ஒருபுறமிருக்க 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்கள் தற்போது மார்வெல் காமிக்ஸ் அல்லாத வேறு சில படங்களையும் கைவசம் வைத்துள்ளார்கள். அதிலும் அவெஞ்சர்ஸ் நாயகர்களே பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

ஏற்கெனவே ‘தோர்’ க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் வெளியான ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ படத்தின் திரைக்கதையை ருஸ்ஸோ சகோதரர்கள் எழுதியிருந்தனர். தற்போது ‘ஸ்பைடர்மேன்’ டாம் ஹாலண்ட் நடிக்கும் ‘செர்ரி’ படத்தையும் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியருடன் இணைந்து விரைவில் ஒரு புதிய படம் ஒன்றில் ருஸ்ஸோ சகோதரர்கள் பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த முழு அறிவிப்பையும் வெளியிடுவதாக ருஸ்ஸோ சகோதரர்கள் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளனர்.

அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் மீண்டும் ராபர்ட் இணைவது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in