

ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் வெளியான ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ படம் தொடங்கி இறுதியாக வெளியான ‘ஜஸ்டிஸ் லீக்’ வரை சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹென்றி கவில். அவரது ஆஜானுபாகுவான தோற்றமும், சூப்பர்மேனின் அடையாளங்களில் ஒன்றான இரட்டை தாடை முகமும் ரசிகர்களின் மனதில் ஹென்றியை சூப்பர்மேனாகவே நிறுத்திவிட்டன.
இந்நிலையில் தற்போது டிசி நிறுவனம் தொடர் தோல்விகளுக்குப் பிறகு தன்னுடைய படமாக்கல் முறையை மாற்றி வருகிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி நடிகர்கள் வரை ஏராளமான மாற்றங்களைச் செய்து வருகிறது. பேட்மேனாக நடித்து வந்த பென் அஃப்லெக்குக்குப் பதில் தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சூப்பர்மேனாக ஏறக்குறைய 7 ஆண்டுகளாக நடித்து வரும் ஹென்றி கவில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது வேறொருவருக்கு டிசி நிறுவனம் வாய்ப்பு வழங்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு வதந்திகளும் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
இந்நிலையில் இது போன்ற வதந்திகளுக்கு ஹென்றி கவில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
''இணையத்தில் படிக்கும் இதுபோன்ற கற்பனைச் செய்திகள் அபாரமானவையாக இருந்தாலும், அதே நேரம் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் மக்கள் அதுகுறித்து ஆர்வமாக இருக்கிறார்கள். சூப்பர்மேன் போன்ற ஒரு கதாபாத்திரம் குறித்து அவர்கள் ஆர்வமாக இருப்பது மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.
சூப்பர்மேன் ஒரு அட்டகாசமான கதாபாத்திரம். அதைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள், கற்பனைச் செய்திகளை உருவாக்குகிறார்கள் என்றால் அதை மீண்டும் திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம். உண்மையில் அந்தக் கதாபாத்திரத்தில் மீண்டும் நான் நடிக்க விரும்புகிறேன்''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.