ஆவணப்படத்தைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம்: லியார்னடோ டிகாப்ரியோ தயாரிக்கிறார்

ஆவணப்படத்தைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம்: லியார்னடோ டிகாப்ரியோ தயாரிக்கிறார்
Updated on
1 min read

ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் பாரி ஜென்கின்ஸ், நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ தயாரிப்பில் 'விருங்கா' என்ற ஆவணப்படத்தைத் தழுவி திரைப்படம் இயக்குகிறார். நெட்ஃபிளிக்ஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளது.

2014-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஆவணப்படம் 'விருங்கா'. ஆர்லண்டோ வான் ஐன்ஸைடல் இயக்கியிருந்த இந்தப் படம், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் இருக்கும் விருங்கா தேசியப் பூங்காவில் இருக்கும் மலைக் கொரில்லா இனத்தைக் காப்பாற்றும் போராட்டத்தைப் பற்றியது.

காங்கோவில் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் எண்ணைய் தேட ஆரம்பித்ததைத் தொடர்ந்து அந்த நாட்டில் எழுந்த அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள், விருங்கா நாட்டின் பல்லுயிர்த்தன்மை ஆகியவற்றை இந்த ஆவணப்படம் பேசியது. 2015-ம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

தற்போது இதைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் வான் ஐன்ஸைடல் நிர்வாகத் தயாரிப்பாளராகச் செயல்படவுள்ளார். 'மூன்லைட்' திரைப்படத்துக்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கரை வென்ற இயக்குநர் ஜென்கின்ஸ் தற்போது அமேசானுக்காக வெப் சீரிஸ் பணிகளில் உள்ளார். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடிகர் டிகாப்ரியோ, அதன் ஒரு பகுதியாகவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

டிகாப்ரியோ அடுத்ததாக மார்டின் ஸ்கோர்செஸி இயக்கத்தில் 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்' என்ற திரைப்படத்தில் ராபர்ட் டி நீரோவுடன் நடிக்கிறார். இதே பெயரில் வெளிவந்த புத்தகத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in