

கரோனா நெருக்கடியால இந்த வருடம் நடத்த முடியாமல் போன கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா, அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல நடிகைகள் டினா ஃபே மற்றும் ஏமி போலர் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலவுவதாலும், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், பல்வேறு முக்கிய பொது நிகழ்ச்சிகள் ரத்தாகி அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் கோல்டன் க்ளோப் முக்கியமான விருதாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆஸ்கர் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோல்டன் க்ளோப் தரப்பு புதிய தேதியை அறிவித்துள்ளதாக. முன்னதாக பிப்ரவரி 28 அன்று ஆஸ்கர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஆஸ்கர் ஏப்ரல் 25-ம் தேதி நடக்கும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. எனவே அந்த தேதியை கோல்டன் க்ளோப் எடுத்துக்கொண்டுள்ளது.
ஆஸ்கரைப் போல அல்லாமல், கோல்டன் க்ளோப் விருது விழா ஒரு ஹோட்டலில், இரவு நேர விருந்து போலத்தான் ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு வருடமும் வழக்கமாக விருது வழங்கும் விழாக்களுக்குத் தொடக்கப் புள்ளியாக கோல்டன் க்ளோப் பார்க்கப்படுகிறது.
கரோனா நெருக்கடியால் புதிய படப்பிடிப்புகள், திரைப்படத் தயாரிப்பு வேலைகள் தடைப்பட்டுள்ளதாலும், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாலும், அடுத்த வருட விழாவுக்கு எந்தெந்த படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படும் என விழா அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.