

அமெரிக்காவைச் சேர்ந்து பிரபல முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன். மிக இளம் வயதிலேயே உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வென்ற பெருமைக்குரியவர். குத்துச் சண்டை என்றாலே மைக் டைசன் தான் என்னும் அளவுக்கு உலகம் முழுக்க பிரபலமானவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மைக் டைசனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகவுள்ளது என்றும் அதில் மைக் டைசனாக ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ஜேமி ஃபாக்ஸ் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல்கள் யாவும் உறுதிசெய்யப்படாமல் இருந்து வந்தது. தற்போது மைக் டைசன் படம் குறித்தும் அதில் தான் நடிப்பது குறித்து ஜேமி ஃபாக்ஸ் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் நேரலை ஒன்றில் ஜேமி ஃபாக்ஸ் கூறியுள்ளதாவது:
நிச்சயமாக மைக் டைசன் பயோபிக் உருவாகிறது. வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் எடுப்பது மிகவும் கடினமானது. சில நேரங்களில் அவற்றை எடுத்து முடிக்க 20 ஆண்டுகள் கூட ஆகும். ஆனால் நாங்கள் தற்போதுதான் வேலைகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளோம்.
நாங்கள் அனைவரது வளர்ச்சியையும் காட்ட விரும்புகிறோம். இந்த கதையை தேர்வு செய்யும்போதி மைக் டைசனுடைய பயணத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்.
இந்த படத்துக்காக நான் எப்படி மாறப்போகிறேன் என்று நினைத்தால், மக்கள் நான் தான் மைக் டைசனோ என்று நினைத்து தெருக்களில் என் ஆட்டோகிராஃபுக்காக ஓடி வரப்போகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு ஜேமி ஃபாக்ஸ் கூறியுள்ளார்.