

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர் ‘தட் 70ஸ் ஷோ’. 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இத்தொடரில் ஸ்டீவன் ஹைட் என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ்பெற்றவர் டேனி மாஸ்டர்சன். இவர் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மார்ச் 2017 ஆம் ஆண்டு டேனி மாஸ்டர்சன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நான்கு பெண்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து ‘தி ரேன்ச்’ என்ற தொடரிலிருந்து டேனி மாஸ்டர்சனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் நீக்கியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு டேனி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில் தற்போது டேனி மாஸ்டர்சன் மீது 3 பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து டேனியின் வழக்கறிஞர் கூறும்போது, ''மாஸ்டர்சனும் அவரது மனைவியும் இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், இந்த விவகாரத்தின் முடிவில் உண்மை வெளியே வரும் என்று அவர்கள் நம்புகின்றனர்'' என்றார்.