

கறுப்பின மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்று அறிவுறுத்தி லண்டனில் நடந்த போராட்டத்தில் 'ஸ்டார் வார்ஸ்' திரைப்பட வரிசையில் நடித்த நடிகர் ஜான் போயேகா கலந்து கொண்டார். இதில் அவர் பேசிய பேச்சுக்கு ஸ்டார் வார்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லூகாஸ் ஆர்ட்ஸ், அவரைப் பாராட்டி ஆதரவு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஒரு காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் கறுப்பின மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த நாடுகளில் போராட்டம் செய்து வருகின்றனர். blacklivesmatter என்ற இயக்கத்தின் கீழ் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
லண்டனில் ஹைட் பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட 'ஸ்டார் வார்ஸ்' திரைப்பட நடிகர் ஜான் போயேகா, அங்கிருக்கும் மக்களின் நடுவே பேசினார். மேலும் இப்படி இனவாதத்தால் உயிரிழந்தது ஜார்ஜ் ஃப்ளாய்ட் மட்டுமே கிடையாது. இன்னும் பலர் உள்ளனர் என்று அவர்களையும் தனது உரையில் குறிப்பிட்டார்.
"நான் என் இதயத்திலிருந்து உங்களிடம் பேசுகிறேன். இதன் பிறகு எனக்கு நடிக்க வாய்ப்பு வருமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. கறுப்பின மக்களின் உயிர்கள் எப்போதுமே முக்கியமானவைதான். நாம் எப்போதுமே முக்கியமானவர்களாக இருந்திருக்கிறோம். நாம் எப்போதுமே ஏதோ ஒரு வகையில் பங்காற்றியுள்ளோம். தடைகளைத் தாண்டி வென்றிருக்கிறோம். இது நம் எழுச்சிக்கான நேரம். நான் இனிமேலும் காத்திருக்க மாட்டேன்.
நாம் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு ஆதரவாக இங்கு நிற்கிறோம். சாண்ட்ரா ப்ளாண்டுக்கு ஆதரவாக இங்கு நிற்கிறோம். ட்ரேவான் மார்டின், ஸ்டீஃபன் லாரன்ஸுக்கு ஆதரவாக இங்கு நிற்கிறோம்.
இது எவ்வளவு வலிதரக்கூடியது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் இனத்தினால் எந்த பலனுமில்லை என்று தினம் தினம் நினைவூட்டக்கூடியது எவ்வளவு வலியைத் தரும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இனி அது நடக்காது.
அதே வேளையில் இந்த தருணத்தில் நாம் கட்டுப்பாடுடன் இருப்பது மிக மிக முக்கியம். எவ்வளவு ஒருங்கிணைப்போடு, அமைதியாகப் போராட வேண்டுமோ அப்படிச் செய்வது முக்கியம். ஏனென்றால் நாம் இதில் தோற்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஒழுங்கற்றுப் போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இன்று அது நடக்காது" என்று போயேகா பேசினார்.
போயேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் லூகாஸ் ஆர்ட்ஸ் நிறுவனம், "இனவாதம் என்ற அரக்கன் ஒழிய வேண்டும். நீண்ட நாட்களாக வர வேண்டிய அந்த மாற்றம் வர நாங்கள் எங்கள் பங்கைச் செய்வோம். ஜான் போயேகா, நீங்கள் எங்கள் நாயகன்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.