

சில்வஸ்டர் ஸ்டாலோன் நடிப்பில் 1976ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராக்கி’. இப்படத்தின் திரைக்கதையை சில்வர்ஸ்டர் ஸ்டாலோனே எழுத ஜான் ஜி. ஏவில்ஸ்டன் இயக்கியிருந்தார். இப்படம் 1977ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றது. இன்று வரை பாக்ஸிங் படங்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
அதன்பிறகு ராக்கி 2,3,4,5 என்ற வரிசையாக பல பாகங்கள் வெளியாகின. அனைத்திலும் சில்வஸ்டர் ஸ்டாலோனே நாயகனாக நடித்திருந்தார். இதில சில படங்களை அவரே இயக்கவும் செய்திருந்தார்.
இந்நிலையில் முதன்முதலில் ‘ராக்கி’ திரைப்படம் உருவானவிதம் குறித்த ஆவணப்படம் ஒன்றை டெரெக் ட்வேய்ன் ஜான்ஸன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இதில் ‘ராக்கி’ திரைப்படம் உருவானபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோக்கள், புகைப்படங்கள், பிரபலங்களின் பேட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சில்வஸ்டர் ஸ்டாலோன் பின்னணி குரல் கொடுக்கவுள்ளார்.
இந்த ஆவணப்படம் வரும் 9ஆம் தேதி இணையத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து இயக்குநர் டெரெக் ட்வேய்ன் ஜான்ஸன் கூறியுள்ளதாவது:
ராக்கி ரசிகர்களுக்கு இந்த ஆவணப்படம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். ராக்கியாக நடித்த சில்வஸ்டர் ஸ்டாலோனே இதில் பின்னணி பேசியிருக்கிறார். இது பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்.
இவ்வாறு டெரெக் ட்வேய்ன் ஜான்ஸன் கூறியுள்ளார்.