

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலானது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் தற்போது உருவெடுத்துள்ளது.
உலகையே உலுக்கிவரும் இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவில் வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளூனி. அதில் அவர் கூறியிருப்பதாவது:
இதுவரை எத்தனை கறுப்பின மக்கள் போலீசாரால் கொல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம். டாமிர் ரைஸ், ஃபிலாண்டோ காஸ்டைல், லக்வான் மெக்டொனால்டு.. இன்னும் ஏராளமானோர். ஆனால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொலையில் சிறிய சந்தேகம் இருக்கிறது. நம் கண்முன்னே நான்கு போலீஸ்காரர்களின் கையால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மூச்சு நிறுத்தப்பட்டது. 1968, 1992, 2014 போலவே இப்போதும் அரசின் கொடூர நடவடிக்கைக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டங்களின் பலன் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. இனி ஒருவரும் கொல்லப்படக்கூடாது என்று பிரார்த்தனை செய்வோம். ஆனால் பெரிய அளவில் மாற்றம் நிகழப்போவதில்லை என்பது நமக்கு தெரியும்.
நம் முன்னோர் செய்த பாவங்களின் மூலம் நாம் எவ்வாறு ஒரு நாடாக மாறியுள்ளோம் என்பதற்கு தற்போது வீதியில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் ஒரு நினவூட்டல்.. மற்ற மனிதர்களை நாம் வாங்கவோ விற்கவோ செய்வதில்லை என்பதல்ல கவுரவும். நமது நீதித் துறையிலும், சட்டத்திலும் மாற்றம் வரவேண்டும். இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ். அது நமக்குள் 400 ஆண்டுகாலமாக பரவிவருகிறது. அதற்கு இன்னும் ஒரு மருந்தை நாம் கண்டுபிடிக்கவில்லை,
இவ்வாறு அந்த கட்டுரையில் ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.