அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் - ரயான் ரெனால்ட்ஸ் தம்பதி $200,000 நிதியுதவி

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் - ரயான் ரெனால்ட்ஸ் தம்பதி $200,000 நிதியுதவி
Updated on
1 min read

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலானது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் தற்போது உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரான ரயான் ரெனால்ட்ஸ் மற்றும் அவரது மனைவி பிளேக் லைவ்லி இருவரும் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான தேசிய கூட்டமைப்புக்கு (NAACP) 200,000 டாலர் நிதியுதவி அளித்துள்ளனர்.

இதுகுறித்து ரயான் ரெனால்ட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சட்டத்தில் இருக்கும் வெவ்வேறு விதிமுறைகல் குறித்தோ அல்லது காரிலிருந்து வெளியே இழுக்கப்படுவது குறித்தோ எங்கள் குழந்தைகளை தயார் செய்து குறித்து நாங்கள் கவலைப்பட்டதில்லை. ஆனால் அதை தினமும் அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது. அந்த பயம் மற்றும் கோபத்தை எங்களால கற்பனை கூட செய்யமுடியவில்லை.

கடந்த காலங்களில் நிறவெறியை நமக்குள் வேர்விட அனுமதித்தது குறித்து வெட்கப்படுகிறோம். எனவே எங்கள் குழந்தைகளை அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்ற மனிதர்களுக்கு வலியை ஏற்படுத்தாமல் இருக்க இந்த மோசமான விஷயம் அவர்களுக்கு ஊடுருவி விடாமல் அவர்களை வளர்க்க கடமைப்பட்டுள்ளோம்.

ஜார்க் ஃபிளாய்ட், அஹமாத் ஆர்பெரி, ப்ரியோன்னா டைலர், எரிக் கார்னர் உள்ளிட்டோர் மட்டுமல்லாது கேமராவில் பதிவு செய்யப்படாத ஏராளமான கறுப்பின ஆண்கள் மற்றும் பெண்களின் மரணங்களுக்கு இதுதான் நாங்கள் செய்யும் கவுரவமாக இருக்கும்.

கடந்த வாரம் நிறவெறிக்கு எதிரான தேசிய கூட்டமைப்புக்கு 200,000 டாலர் நிதியுதவி வழங்கியுள்ளோம். அதன் தலைவர் ஷெரிலின் இஃபில் உடன் உறுதுணையாக இருக்கிறோம்.

இவ்வாறு ரயான் ரெனால்ட்ஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in