

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற நபரை ஒரு மோசடி வழக்கில் சந்தேகித்து போலீஸார் கைது செய்தனர். கைதுக்கு ஒத்துழைக்காத அவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் போலீஸாரின் பிடியில் இருந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்ததையடுத்து, மினியபோலிஸ் நகரில் ஆங்காங்கே பெரியளவில் போராட்டம் வெடித்தது. இதில் சில இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுமிடையே மோதல் ஏறப்பட்டது.
இந்நிலையில் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
வயோலா டேவிஸ்: அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை இதுதான். கறுப்பாக இருப்பதற்காக குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாங்கள் தற்போது நவீன கால கொலைகளை எதிர்கொள்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துவதற்காக வழியை காணாத வரை அமெரிக்கா எப்போதும் உயர்ந்த நாடாக மாறாது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஜான் போயேகா: என்னால் சுவாசிக்க முடியவில்லை. என் வயிறு வலிக்கிறது. என் கழுத்து வலிக்கிறது. எல்லாமே வலிக்கிறது. அவர்கள் என்னை கொல்லப்போகிறார்கள்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட். இனவெறி பிடித்த காவலர்களால் கறுப்பின மக்கள் மீதான தாக்குதல் தொடர்வது வேதனையளிக்கிறது.
ஜஸ்டின் பீபர்: இது நிறுத்தப்படவேண்டும். இது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இந்த மனிதரின் மரணம் எனது கோபத்தை தூண்டுகிறது. இனவெறி என்பது ஒரு பிசாசு. அதற்கு எதிராக நாம் நம் குரலை பயன்படுத்தவேண்டும்.
அன்னே ஹாத்வே: இதுதான் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவர் உயிரோடு இருந்திருக்கவேண்டும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரை கொன்ற காவலர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
நிக் ஜோனாஸ்: ஜார்ஜ் ஃப்ளாய்டின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் தங்கள் அன்புக்குரிய ஒருவரை இழந்துவிட்டார்கள். இது மன்னிக்கவே முடியாதது.