

டிசி காமிக்ஸ் திரைப்படம் ஒன்றில் ஹென்றி கேவிலை மீண்டும் சூப்பர்மேனாக நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்', 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்களில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் ஹென்றி கேவில். தற்போது இவரை வரப்போகும் டிசி காமிக்ஸ் சார்ந்த திரைப்படத்தில் மீண்டும் சூப்பர்மேனாக நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால் இது 'ஆக்வாமேன் 2', 'சூஸைட் ஸ்க்வாட்' அல்லது 'தி பேட்மேன்' படங்களில் ஒரு கவுரவத் தோற்றமாக இருக்கவே வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வார்னர் பிரதர்ஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான தெளிவும் தரப்படவில்லை. சமீபத்தில் இயக்குநர் ஸாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் பதிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் நட்புக்காக நடித்துத் தர பல நடிகர்கள் முன் வந்துள்ளனர்.
கடந்த வருடம் சூப்பர்மேன் கதாபாத்திரம் குறித்துப் பேட்டி கொடுத்திருந்த கேவில், "சூப்பர்மேன் உடை இன்னும் என்னிடம்தான் உள்ளது. அது இன்னும் என்னுடையதுதான். நான் இன்னும் அதை விட்டுத்தரவில்லை. இன்னும் அந்தக் கதாபாத்திரத்துக்காக நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நிறைய கதை சொல்ல வேண்டியுள்ளது. கதாபாத்திரத்தின் ஆழத்துக்கு நான் செல்ல வேண்டும். காமிக்ஸில் இருப்பவற்றைப் பிரதிபலிக்க வேண்டும். அது எனக்கு முக்கியம். இன்னும் அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் நிறைய நியாயம் செய்ய வேண்டும்" என்று பேசியிருந்தார்.