

வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு நடக்கவேண்டிய அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தனர்.
இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும் என்று வெனெடோ ஆளுநர் லூகா ஸாயா அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும் கட்டிடக்கலை திருவிழா மட்டும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடைபெறவிருந்தாலும் அதில் குறைவான திரைப்படங்களே திரையிடப்படும் என்று ஸாயா தெரிவித்துள்ளார். எந்தப் படங்கள் எப்போது திரையிடப்படுகிறது என்பது குறித்த தகவல்களை அவர் கூறவில்லை.
வெனிஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் இந்த மாதம் தொடக்கம் முதலே திரைப்பட விழா குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வெனிஸ் திரைப்பட விழா ஆன்லைன் நிகழ்வாக நடைபெறாது என்பதை திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் திட்டவட்டமாகக் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.