திவாலான ஹூக் ஸ்ட்ரீமிங் சேவை: தளம் முடங்கியது

திவாலான ஹூக் ஸ்ட்ரீமிங் சேவை: தளம் முடங்கியது
Updated on
1 min read

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஹூக் ஸ்ட்ரீமிங் சேவை திவாலானதைத் தொடர்ந்து அதன் சேவைகளை மொத்தமாக நிறுத்தியுள்ளது.

ஜனவரி 2015-ல் ஆரம்பிக்கப்பட்ட ஹூக் ஸ்ட்ரீமிங், சிங்டெல், சோனி பிக்சர்ஸ் மற்றும் வார்னர் ப்ரதர்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி. 2018-ஆம் ஆண்டு, டிஸ்னியின் ஹாட்ஸ்டாருடன், அதன் ஹாலிவுட் தயாரிப்புகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான, பல மில்லியன் டாலர் மதிப்பிலான 4 வருட ஒப்பந்தத்தைப் போட்டது. தற்போது நிறுவனம் திவால் ஆனதால் இந்த ஒப்பந்தமும் ரத்தாகியுள்ளது.

ஆசியாவுக்காக ஆசியாவிலேயே தயாரான சேவை என்ற பெயரைத் தாங்கி ஆரம்பமான ஹூக், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் காணக் கிடைத்தது. சந்தையில் போட்டி அதிகமானதால் தங்களால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்று, ஹூக் நிறுவனம் தானாகவே முன்வந்து திவால் அறிக்கையை சிங்கப்பூரில் தாக்கல் செய்தது.

தனது இணையதளத்தையும் முடக்கியுள்ள ஹூக், அதில் ஏப்ரல் 30, 2020-லிருந்து ஹூக் சேவை செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

"கடந்த ஐந்து வருடங்களாக, உங்களுக்கு நாங்கள் நம்ப முடியாத ஆச்சரியங்கள், மனதைப் பிசையும் கதைகள், வயிறு குலுங்கும் சிரிப்பு, அட்டகாசமான ஆக்‌ஷன் ஆகியவற்றைத் தந்துள்ளோம். இங்கிருந்து ஹாலிவுட் வரை உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவரையும் நினைத்து எங்கள் இதயம் நன்றியுணர்வால் நிறைந்துள்ளது" என்று தளத்தில் ஹூக் பகிர்ந்துள்ளது.

ஏற்கனவே பணம் கட்டியவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா என்ற கேள்விக்கு, "துரதிர்ஷ்டவ்சமாக, ஹூக் திவாலாகிவிட்டது. எனவே பணத்தைத் திரும்பக் கொடுக்க இயலாது" என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in