

பாப் பாடகி மடோனாவுக்கு உடலில் கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வதற்கான ஆன்டி பாடீஸ் இருப்பது பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே உலகளவில் பெரும்பாலான பிரபலங்கள், நட்சத்திரங்கள், தங்களின் சமூக வலைதள பக்கங்கள் மூலம் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். வீடியோ, புகைப்படம், விழிப்புணர்வு பதிவுகள் என அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர். அப்படி பிரபல பாப் பாடகி மடோனாவும், குவாரண்டைன் டைரி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அதில் பகிர்ந்திருந்த மடோனா, "நான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டேன். என் உடலில் ஆன்டி பாடீஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே நாளைக்கு நான் என் காரை எடுத்துக் கொண்டு நெடும் பயணம் செல்லப் போகிறேன். என் காரின் ஜன்னலை இறக்கி கோவிட்-19 இருக்கும் காற்றை சுவாசிக்கப் போகிறேன். சூரியன் பிரகாசமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம், பலருக்கு இந்த ஆன்டிபாடி சோதனையைச் செய்து வருகிறது. குறிப்பிட்ட நபருக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறதா இல்லையா, அதை எதிர்க்க உடலில் ப்ரோட்டீன் உருவாகிறதா என்பதே பரிசோதிக்கப்படுகிறது. ஆனால் உடலில் ஆன்டிபாடீஸ் இருப்பதும் கரோனா வைரஸைத் தடுக்கப் போதுமானதா என்பது பற்றி அந்த மையம் எதையும் இதுவரை சொல்லவில்லை.