ஸ்ட்ரீமிங்கில் வெளியானால் மட்டுமே ஆஸ்கர் போட்டிக்குத் தகுதி: வரலாற்றில் முதல் முறை

ஸ்ட்ரீமிங்கில் வெளியானால் மட்டுமே ஆஸ்கர் போட்டிக்குத் தகுதி: வரலாற்றில் முதல் முறை
Updated on
1 min read

கரோனா தொற்று நெருக்கடியால் ஹாலிவுட் துறையே முடங்கியுள்ளதையடுத்து, அடுத்த வருட ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இணையத்தில் ஸ்ட்ரீமிங்கில் வெளியான படங்களை மட்டுமே அனுமதிக்கவுள்ளதாக ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் தற்காலிகமாக இந்த விதியைக் கொண்டு வந்துள்ளதாக விழா அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில், திரையரங்கில் குறைந்தபட்சம் ஏழு நாட்கள், ஒரு நாளைக்கு 3 காட்சிகள் ஓடினால் மட்டுமே அந்தப் படம் ஆஸ்கர் போட்டிக்குத் தகுதி பெறும்.

தற்போது, அடுத்த வருடம் 93-வது ஆஸ்கர் விருது விழாவுக்கு மட்டும், திரையரங்க வெளியீடாகத் திட்டமிடப்பட்டு, ஆனால் முன்னதாகவே வணிக ரீதியாக ஸ்ட்ரீமிங்கிலோ, வீடியோ ஆன் டிமாண்ட் வகையிலோ வெளியான படங்கள், சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியிடத் தகுதிபெறும்.

அந்தப் படம் ஸ்ட்ரீமிங் அல்லது டிமாண்டில் வெளியான 60 நாட்களுக்குள், அகாடமி உறுப்பினர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் பாதுகாப்பாக, அகாடமியின் அறையில் திரையிடப்பட வேண்டும். அரசாங்க அறிவுறுத்தலின் படி திரையரங்குகள் திறக்கப்படும்போது, அகாடமி ஒரு தேதியை அறிவிக்கும். அந்தத் தேதியிலிருந்து இந்தத் தற்காலிக விதிமுறை நீக்கப்படும்.

அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டான் ஹட்ஸன் இருவரும் இணைந்து இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"திரைப்படங்களைத் திரையரங்கில் அனுபவிப்பதை விட மிகச்சிறந்த வழி வேறெதுவும் இல்லை என்பதை அகாடமி வலுவாக நம்புகிறது. அதற்கான நம் அர்ப்பணிப்பு என்பது என்றும் மாறாது. ஆனால், தற்போதைய வரலாறு காணாத கோவிட்-19 நெருக்கடியால், இப்படி ஒரு தற்காலிக விதிவிலக்கை நமது விருதுகளுக்கான தகுதிக்கு விதிகளாக வைப்பது தேவையாயிருக்கிறது.

நிலையற்ற இந்த சூழலில், அகாடமி, அதன் உறுப்பினர்களையும், சக ஊழியர்களையும் ஆதரிக்கிறது. அவர்களது படங்கள் பார்க்கப்பட்டு, கொண்டாடப்படுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். குறிப்பாக முன்னெப்போதையும் விட திரைப்படங்களை மக்கள் இப்போது ரசிக்கிறார்கள்

(திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்) எப்போதும் போல அகாடமியின் வழக்கமான விதிகள் போட்டியிடும் படங்களுக்குப் பொருந்தும்" என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் கூட, பட வெளியீட்டுக்கு நெருக்கடி ஏற்படலாம் என்ற காரணத்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைத் தாண்டி, நியூயார்க் நகரம், பே ஏரியா, சிகாகோ, மியாமி, அட்லாண்டா உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகி ஓடும் படங்களையும் போட்டிக்குப் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒலிக் கலவை, ஒலித் தொகுப்பு என்ற இரண்டு விருதுப் பிரிவுகளை ஒன்றாக இணைப்பதாக அகாடமி அறிவித்துள்ளது. பிப்ரவரி 28, 2021 அன்று ஆஸ்கர் விழா நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in