

1993 ஆம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் 'ஜுராசிக் பார்க்'. ஸ்பீல்பெர்க் இயக்கிய இப்படம் இன்று வரை ஹாலிவுட் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இப்படத்தின் மூன்றாம் பாகம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தோடு ஜுராசிக் பார்க் படங்களை இயக்கும் பொறுப்பிலிருந்து ஸ்பீல்பெர்க் விலகிக் கொண்டார்.
அதன் பிறகு 14 வருடங்களுக்குப் பிறகு ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்டு’ படம் வெளியானது. க்றிஸ் ப்ராட் நடிப்பில் கோலின் ட்ரெவாரோ இயக்கிய இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் ‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது . இப்படத்துக்கு ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ பாணியில் முதல் பாகத்திலிருந்து தற்போது ஜுராசிக் படவரிசையில் நடித்த அனைவரும் இப்படத்தில் இடம்பெறுவார்கள் என்று நடிகர் க்றிஸ் ப்ராட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜோ மேஸெல்லோ ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ படத்தில் நடிப்பது பற்றி தன்னிடம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஜோ மேஸெல்லோ கூறுகையில், '' ‘ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் அடுத்த பாகத்தில் நான் நடிக்கப்போவதில்லை. ஏனெனில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து யாரும் என்னிடம் தொடர்புகொண்டு பேசவில்லை. டிம்முக்கு (கதாபாத்திரத்தின் பெயர்) என்னவானது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வோம் என்று நான் நம்புகிறேன். அந்தக் கதாபாத்திரத்தை வைத்து நிறைய விஷயங்கள் செய்யமுடியும். அவன்தான் ஜுராசிக் பார்க்கின் வாரிசு'' என்றார்.
ஜுராசிக் பூங்காவை உருவாக்கிய ஜான் ஹாம்மண்டின் பேரனாக டிம் மர்ஃபி என்ற சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோ மேஸெல்லோ.