

கேன்ஸ், மும்பை திரைப்பட விழா உட்பட 20 திரைப்பட விழா குழுக்கள் ஒன்றிணைந்து யூடியூப் வழியாக சர்வதேச திரைப்பட விழாவை நடத்தவுள்ளன.
கரோனா நெருக்கடி காரணமாக அடுத்த சில மாதங்கள் என ஆரம்பித்து இந்த வருடத்தின் இறுதி வரை திட்டமிடப்பட்டிருந்த பல பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே கேன்ஸ் உட்பட பல திரைப்பட விழாக்கள் ரத்தாகியுள்ளன. இதில் சில விழாக்கள் இணையம் வழியாக நடக்கலாம் என கடந்த வாரம் செய்திகள் வந்தன. தொடர்ந்து சில விழா குழுக்களிடமிருந்து மறுப்பும் வந்தது. தற்போது, 'வி ஆர் ஒன்: எ க்ளோபல் ஃபிலிம் பெஸ்டிவல்' ('We Are One: A Global Film Festival') என்ற பத்து நாள் திரைப்பட விழாவை யூடியூப் மூலமாக நடத்த, சர்வதேச அளவில் பல்வேறு திரைவிழா குழுக்களும் ஒன்றிணைந்துள்ளன.
நியூயார்க்கின் ட்ரிபேகா எண்டர்ப்ரைசஸ் தரப்பு இந்த இணைய விழாவை நடத்துகிறது. இதில் பங்கெடுத்துக்கொள்வது குறித்து மும்பை திரைப்பட விழா குழு ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
"கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும், We Are One: A Global Film Festival நிகழ்வில், உலகம் முழுவதும் இருக்கும் மற்ற திரைப்பட விழாக்களோடு இணைவதில் பெருமை கொள்கிறோம். இந்த இலவசமான 10 நாள் டிஜிட்டல் விழா யூடியூபில் மே 29 தொடங்கும்" என்று மும்பை திரைப்பட விழாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் டொரண்டோ, ஜெருசெலம், சிட்னி, பெர்லின், மர்ராகெச், ஆன்ஸி, பிஎஃபை லண்டன், க்வாட்லஹாரா, கலோவி வேரி உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களின் தரப்புகளும் இணைந்துள்ளன. மேலும் சான் செபாஸ்டியன், மக்காவ், சரஹேவோ, நியூயார்க், டோக்யோ, லொகார்னோ, மெல்பர்ன், சண்டான்ஸ், வெனிஸ் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்தும் குழுக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன.
வழக்கமான திரைப்பட விழாக்களைப் போலவே, ஆவணப்படங்கள், திரைப்படங்கள், உரையாடல்கள் உள்ளிட்ட மற்ற திரைப்பட விழா சம்பந்தமான நிகழ்வுகளும் இணையத்தில் இருக்கும். இந்த நிகழ்வில் எந்த விளம்பரங்களும் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
விழா நடக்கும் போது, கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், உலக சுகாதார மையத்துக்காக, பார்வையாளர்களிடம் நிதி கோரப்பட்டுத் திரட்டப்படும்.