இமாலய மலையிலும் 'டைட்டானிக்' ரசிகர்: கேட் வின்ஸ்லெட்டின் சுவாரசிய அனுபவம்

இமாலய மலையிலும் 'டைட்டானிக்' ரசிகர்: கேட் வின்ஸ்லெட்டின் சுவாரசிய அனுபவம்

Published on

இமாலய மலையில் இருந்த ஒரு முதியவர், தன்னை 'டைட்டானிக்' படத்தின் நாயகி என்று இனம் கண்டுகொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது என்று நடிகை கேட் வின்ஸ்லெட் கூறியுள்ளார்.

1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டைட்டானிக்'. அப்போது வெளியான படங்களிலேயே அதிக வசூல் என்ற சாதனையை இப்படம் படைத்தது. சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஜேக், ரோஸ் என நாயகன், நாயகி டிகாப்ரியோவும், கேட் வின்ஸ்லெட்டும் பிரபலமடைந்தார்கள். தற்போது அந்தப் படம் வெளியான ஒருசில வருடங்கள் கழித்து நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி கேட் வின்ஸ்லெட் பகிர்ந்துள்ளார்.

"எல்லா இடங்களிலும் 'டைட்டானிக்' வியாபித்திருந்தது. படம் வெளியான இரண்டு வருடங்கள் கழித்து நான் இந்தியா சென்றிருந்தேன். இமயமலைகளின் அடிவாரத்தில், முதுகில் எனது பையைக் கட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு முதியவர் கையில் தடியுடன் என்னை நோக்கி நடந்து வந்தார். அவருக்கு 95 வயதிருக்கும். அவருக்குச் சரியாகக் கண் தெரியவில்லை.

அந்த முதியவர் என்னைப் பார்த்து, 'நீ- டைட்டானிக்' என்று சொன்னார். நான் ஆமாம் என்றேன். அவர் தனது கையை இதயத்தில் வைத்துக்கொண்டு, 'நன்றி' என்று சொன்னார். நான் உணர்வு மிகுதியில் அழுதுவிட்டேன். அந்தப் படம் எவ்வளவு மக்களுக்கு, எப்படியான ஒரு அனுபவத்தைத் தந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.

நான் அதற்கு முன்வரை, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன். (படம் கொடுத்த புகழுக்கு) நான் தயாராகவே இல்லை. திடீரென எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள், என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். என்னைப் பற்றிய உண்மையில்லாத தகவல்களை நான் படிக்கவோ கேள்விப்படவோ ஆரம்பித்தேன். நானும் மனிதி தானே, அது என்னைக் காயப்படுத்தியது.

20 வயதுக்கு மேல் எனது வாழ்க்கை ரோலர் கோஸ்டர் போல இருந்தது. சில அற்புதமான தருணங்கள், சில கடினமான தருணங்களும் இருந்தன. இப்போதெல்லாம் அவற்றைப் பற்றி நினைத்துப் பார்த்து, 'ஹப்பா, நான் அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறேனா?' என்று தோன்றுகிறது" என்று வின்ஸ்லெட் பேசியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in