

கடந்த மார்ச் மாதம் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை டாம் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டது.
டாம் ஹாங்க்ஸ் கரோனா வைரஸால் பாதிப்பட்டிருந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கும் அவரது மனைவி ரீடாவுக்கும் ஆறுதல் கூறி வந்தனர். பின்னர் கரோனா சிகிச்சை முடிந்ததும் டாம் ஹாங்க்ஸ் மற்றும் ரீடா இருவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் டாம் ஹாங்க்ஸ் மற்றும் ரீடா இருவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்காக தங்கள் இரத்தத்தை கொடுக்க முன்வந்துள்ளனர்.
ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் இது குறித்து டாம் ஹாங்க்ஸ் கூறியிருப்பதாவது:
நாங்கள் இப்போது என்ன செய்கிறோம்? நாங்கள் செய்யவேண்டியது என்ன? என்பன குறித்து என்னிடம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. சொல்லப்போனால் எங்கள் உடலில் நோய் எதிர்ப்பு இருப்பதை அறிந்து கொண்டோம். எங்களிடம் அது குறித்து அவர்கள் அணுகியபோது, எங்களுடைய இரத்தம் வேண்டுமா? பிளாஸ்மா சிகிச்சைக்கு நாங்கள் உதவலாமா? என்று அவர்களிடம் நாங்கள் கேட்டோம். நானும் ரீடாவும் தற்போது நலமுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறோம்.
இவ்வாறு டாம் ஹாங்க்ஸ் கூறியுள்ளார்.