

ஷான் லெவி இயக்கவுள்ள புதிய டைம் ட்ராவல் படத்தில் நடிக்க ரையான் ரேனால்ட்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.
மார்வெல் காமிஸின் ‘டெட்பூல்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரையான் ரேனால்ட்ஸ். கடைசியாக ஷான் லெவி இயக்கத்தில் ரையான் ரேனால்ட்ஸ் நடித்த ‘ஃப்ரீ கை’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் காலப்பயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஷான் லெவி இயக்கவுள்ள அடுத்த படத்தில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரையான் ரேனால்ட்ஸ். இப்படத்தை ஸ்கைடான்ஸ் நிறுவனத்தோடு இணைந்து அவரே தயாரிக்கவும் செய்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் கதையை ஜானதன் ட்ராப்பர் எழுதியுள்ளார்.
ரையான் ரேனால்ட்ஸ் நடித்துள்ள ‘டிராகன்ஸ் லயர்’,‘தி க்ரூட்ஸ் 2’, ‘தி ஹிட்மேன்’ஸ் பாடிகார்ட் 2’ ஆகியவை வெளியீட்டு தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதி வெளியாகவிருந்த ‘ஃப்ரீ கை’ திரைப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.