டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் உருவாகும் ஹல்க் ஹோகன் பயோபிக் - நாயகனாக க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் ஒப்பந்தம்
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகனின் வாழ்க்கை வரலாறாக உருவாகவுள்ள திரைப்படத்தில் ஹல்க் ஹோகனாக நடிக்க க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை ‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய டோட் பிலிப்ஸ் இயக்கவுள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான கதை தற்போது உருவாக்கத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்ட இப்படத்தின் கதையை டோட் பிலிப்ஸோடு இணைந்து ஸ்காட் சில்வர் மற்றும் ஜான் பொல்லானோ ஆகியோர் எழுதுகின்றனர்.
ஹல்க் ஹோகனின் ஆரம்பகால வாழ்க்கை, பின்னர் WWF-ன் முன்னணி மல்யுத்த வீரராக ஹல்க் ஹோகன் மாறியது, அதில் தன் சக போட்டியாளர் ஆண்ட்ரே தி ஜெயன்ட் உடனான விரோதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகி வருகிறது.
இது குறித்து க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளதாவது:
இந்த கதை தற்போது உருவாக்கத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும். அதைப் பற்றி வேறெதுவும் பெரிதாக எனக்கு தெரியாது. மல்யுத்த வீரர்களின் உலகத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. தங்களுடைய மறுபக்கத்தை மக்களுக்கு காண்பிக்க அவர்களும் ஆர்வமாகவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் உங்களைப் போலவே ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர், மற்றும் ‘தோர்’ நடிகர், ஹல்க் ஹோகனின் வரலாறு என்பதால் இப்படத்துக்கு ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
