

2018-ம் ஆண்டு வெளியான 'வெனம்' படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பையும், புதிய வெளியீட்டுத் தேதியையும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான சூப்பர் ஹீரோ படம் 'வெனம்'. டாம் ஹார்டி இதில் நாயகனாக நடித்திருந்தார். சோனி-மார்வல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் புதிய திரைப்பட வரிசையில் முதல் படம் இதுவே. மேலும் 'ஸ்பைடர்மேன்' கதாபாத்திரத்தோடும் நேரடித் தொடர்புடைய கதாபாத்திரம் 'வெனம்'.
வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் 856 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. இரண்டாம் படத்தின் வில்லனான கார்னேஜ் என்ற கதாபாத்திரம், முதல் பாகத்தின் இறுதியிலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. எனவே அப்போதே இரண்டாம் பாகம் வரும் என்பது ஏறக்குறைய தெரியவர, முதல் பாகத்தின் வசூல் வெற்றி அதை உறுதி செய்தது. படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் 2019-ம் ஆண்டு தொடங்கியது.
தற்போது இரண்டாம் பாகத்தின் பெயர் 'வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் ஹார்டி மீண்டும் நாயகனாக நடிக்க, ஆண்டி செர்கிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். வுட்டி ஹாரெல்ஸன் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார். முன்னதாக, இந்தப் படம் அக்டோபர் 1, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம், 'தி பேட்மேன்' படத்தை அதே நாளில் வெளியீடு செய்வதாக அறிவித்துள்ளதால், 'வெனம்' இரண்டாம் பாகம் திட்டமிட்டதற்கு முன்னதாகவே, ஜூன் 25, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.